பிஎம் கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் இ-கேஒய்சி செய்ய ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க அஞ்சல்துறை உதவுகிறது
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.6000/- வழங்கும் 'பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி' என்ற திட்டம் 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக (ரூ.2000/- வீதம்) இந்த நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
மத்திய அரசின் 'பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி' திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP(One Time Password-ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்) அங்கீகாரத்தை பயன்படுத்தி இ-கேஒய்சி(இ-உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள்) சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் தங்களது அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது தபால்காரரை அணுகி, ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையை பெற அஞ்சல் துறை ரூ.50/- கட்டணம் வசூலிக்கிறது. ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு, விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் (https://pmkisan.gov.in/aadharekyc.aspx) அல்லது பிஎம் கிசான் செயலியில் OTP(One Time Password-ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்) அங்கீகாரத்தை பயன்படுத்தி இ-கேஒய்சி-யை சமர்ப்பிக்கலாம். இது அவர்கள் வங்கி கணக்கில் நிதி உதவி பெறுவதை எளிதாக்கும்.
எனவே பிஎம் கிசான் பயனாளிகள் இ-கேஒய்சி-யை சமர்ப்பிக்க ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க/புதுப்பிக்க அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் ஐபிபி(இந்திய அஞ்சல் வங்கி)யின் சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை நகர மண்டலம், ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கும் சேவையை சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பிஎம் கிசான் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 2022 முதல் வழங்கி வருகிறது.
சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் க.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்