ஜல்- ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் 100 சதவீதம் குடிநீர் விநியோகம் - போர்ட்பேளர் நகராட்சித் தலைவர் திருமதி உ. கவிதா பேச்சு
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தகவல் தொடர்பகம் போர்ட்பிளேர்(அந்தமான்) சார்பில் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா, தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போர்ட்பிளேர் நகராட்சித் தலைவர் திருமதி உ.கவிதா, துணைத் தலைவர் திரு. அஜீஸ் உர் - ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர்கள், மக்கள் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இத்தகையத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தப்படுவதால் நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஹாடோ பகுதி-1 கவுன்சிலர் ஷாகுல் ஹமீத் தலைமை தாங்கினார். கள விளம்பர அலுவலர் திரு. கே. ஆனந்த பிரபு வரவேற்பு ஆற்றினார். கள விளம்பர உதவியாளர் திரு. எம். முரளி நன்றியுரை ஆற்றினார்.
முன்னதாக ஹாடோவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியருக்கு, சுதந்திரத்தின் 'அமுதப் பெருவிழாவில் தூய்மையான இந்தியா' என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
கருத்துகள்