தாம்பரம் விமானப்படை நிலையத்தில் 53 அதிகாரிகள் விமானி பயிற்சியை நிறைவு செய்தனர்
தாம்பரம் விமானப்படை நிலையத்தில் 53 அதிகாரிகள் விமானி பயிற்சியை நிறைவு செய்தனர்.
இந்த 153-வது விமானி பயிற்சி நிறைவு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட ஏர் மார்ஷல் மன்வேந்தரசிங், ஏர் ஆபிசர் கமாண்டிங் இன் சீஃப் பேசும் போது, “இந்த நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற ராணுவ விமானிகள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் சிறந்த ஆற்றலுடன் செயல்பட்டு, வருங்கால அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்” என்று கூறினார்.
குரூப் கேப்டன் ரத்தீஷ் குமார், கமாண்டிங் ஆபிசர் தலைமை விருந்தினரை வரவேற்று, இந்த பயிற்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்.
பயிற்சியை முடித்த 53 அதிகாரிகளில், இந்திய விமானப் படையை சேர்ந்த 41 பேரும், இந்திய ராணுவத்தை சேர்ந்த 2 பேரும், கடற்படையை சேர்ந்த 6 பேரும், கடலோரக் காவல் படையை சேர்ந்த 2 பேரும், நட்புறவு வெளிநாடுகளான மியான்மரிலிருந்து ஒருவரும், நேபாளத்திலிருந்து ஒருவரும் அடங்குவர்.
இந்த விமானி பயிற்சி வகுப்புகள் 22 வாரங்களாக மிகவும் கடினமான வகையில் அமைந்திருக்கும். விமானத்தில் பறப்பது தொடர்பாக மட்டுமே 9 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும். மேலும், 200 மணி நேர விமானத்தள பயிற்சியும் உண்டு. இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அதிகாரிகளுக்கு உயரிய அடையாளத்துடன் கூடிய கௌரவம் அளிக்கப்படும். அதன் மூலம் அவர்களின் தனித்துவமான ஆற்றலை அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்