ஆவடி படைக்கல வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள படைக்கல வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (CVRDE) ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொது நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், இது கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் கருப்பொருள் “வளர்ச்சியடைந்த நாடாக மாற ஊழலற்ற இந்தியா” என்பதாகும்.ஆவடியில் உள்ள படைக்கல வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, இன்று (நவம்பர் 4) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவடி மாநகர காவல் துறை ஆணையாளர் திரு சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி படைக்கல நிறுவனத்தின் ஊழியர்களிடையே “லஞ்ச ஒழிப்பு, ஊழல் மற்றும் நேர்மை” ("Vigilance, Corruption & Integrity") என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்த அவர், ஊழலை தடுக்க வலுவான நிர்வாக நடைமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் மனதில் சிறுவயதிலேயே நேர்மையின் அவசியத்தை விதைப்பதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு குறித்தும் அவர் எடுத்துரைத்தார்
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி ஆவடி படைக்கல வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. முன்னதாக, நிறுவனத்தின் இயக்குனர் திரு வி பாலமுருகன் தொடக்க உரையாற்றினார். இணை இயக்குனர், மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கருத்துகள்