காரில் சென்ற நபர் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாகப் பொய் வழக்கு காவல்துறை ஆய்வாளருக்கு ஒரு லட்சம் அபராதம்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிவன்ராஜ். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராவார். 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகில் வெள்ளையாபுரம் கிராமத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்விற்காக தன் மூத்த வழக்கறிஞர் மற்றும் நண்பர்கள் என நான்கு பேருடன் காரில் வந்திருக்கிறார்.
இராமநாதபுரம் கிழக்கு கடற்கரைச் சாலை அருகில் அதிகாலை வந்தபோது, கேணிக்கரை காவல் நிலையத்தில் அப்போது ஆய்வாளராகப் பணியாற்றிய சிலைமணி, காரை வழிமறித்து ஆவணங்களைப் பரிசோதித்திருக்கிறார். அதில் அனைத்தும் சரியாக இருந்த நிலையிலும், காரில் வந்த சிவன்ராஜ், ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி, இரண்டாயிரம் ரூபாய் அபராதம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் காரிலிருந்த முகமது யாசின் என்பவரை மூர்க்கமாகத் தாக்கியிருக்கிறார்.
அவசரமாகச் சென்றதால் வேறு வழியில்லாமல் அவரிடம் இரண்டாயிரம் ரூபாயை அபராதமாகக் கொடுத்து அதற்கு ரசீது கேட்டிருக்கிறார், சிவன்ராஜ். ஆனால், ஆய்வாளர் சிலைமணி ரூபாய் 100 க்கு ரசீது போட்டுக் கொடுத்திருக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பிய சிவன்ராஜையும், அவருடன் வந்தவர்களையும் தகாதவார்த்தைகளால் திட்டியிருக்கிறார். மேலும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் அவதூறாகப் பேசியுள்ளார் எனவும் வழக்கறிஞர் சிவன்ராஜ் தரப்பில் கூறிய நிலையில்
இது குறித்து சிவன்ராஜ் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்தார். நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் விசாரித்ததில், ஆய்வாளர் சிலைமணி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து ஆய்வாளர் சிலைமணி, காரில் சென்றவர் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக பொய் வழக்கு பதிவு செய்த காரணமாக அந்த அடாவடி ஆய்வாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நான்கு வாரக்காலத்துக்குள் வழக்கறிஞர் சிவன்ராஜூக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக வழங்க வேண்டுமென்றும், விதிமீறலில் ஈடுபட்ட ஆய்வாளர் சிலைமணி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உள்துறைச் செயலாளருக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த தீர்ப்பு காவல்துறை வட்டாரத்திலும் மற்றும் மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. சிலைமணி தற்போது தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்
கருத்துகள்