அரசின் திட்டங்கள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர்
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி பெரம்பலூரில் இன்று தொடங்கியது.
பெரம்பலூர் சங்குப்பேட்டை ராசி திருமண மண்டபத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பிரபாகரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் திரு. மா. அண்ணாதுரை, அறியப்படாத சுதந்திரப்போராட்ட வீரர்கள் குறித்த இந்த கண்காட்சிகள் வாயிலாக பல விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்தார். மேலும், அன்றைய காலத்தில் பெண்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது என்றும், தற்போது பெண்களும் பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை பயின்று வருகின்றனர் என்றும் கூறினார். பெண்கள் கருவுற்றது முதல் குழந்தைப் பருவம் தொடங்கி பள்ளி, கல்லூரி தொடர்ந்து பணி வாய்ப்புகள், ஓய்வூதியம் வரை அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அரசின் திட்டங்களை தெரிந்துகொள்வதன் மூலம் நமக்கு ஏராளமான பயன்கள் கிடைக்கும் என்றும், அரசுத் திட்டங்களை நாம் தெரிந்துகொள்வதுடன் மற்றவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சித்த அலுவலர் எஸ்.காமராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர். சுகந்தி பேசினர். அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. திருச்சி மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் திரு. தேவி பத்மநாபன் வரவேற்றார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு. ரவீந்திரன் நன்றி கூறினார்.
கருத்துகள்