காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் என்ற உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தடை.
மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் சஸ்பெண்ட் உத்தரவு செல்லாதெனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத் தலைவரை மாற்ற வேண்டுமென ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியபோது மோதலாக மாறியதில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளான ராபர்ட், ஜோஸ்வா, டேனியல் ஆகிய மூன்று நபர்கள் காயமடைந்தனர். பாதுகாப்புப் பணிக்காக காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
ரூபி மனோகரன் தான் இந்த மோதல் சம்பவத்திற்கு காரணமென குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அவரை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட நிலையில் மோதல் சம்பவம் குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. அதே போல் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக ஆதிதிராவிடர் பிரிவுத் தலைவர் ரஞ்சன்குமாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதில் இருவரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அதாவது இன்று ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணை இன்று சத்தியமூர்த்தி பவனில் காலை 10.30 மணிக்கு நடைபெற்ற போது நேரில் ஆஜராவதிலிருந்து ரூபி மனோகரன் கால அவகாசம் கேட்டு அதற்கான கடிதத்தை ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நான் நேரில் வந்து விளக்கம் தர 2 வாரம் கழித்து மாற்று தேதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் ரஞசன் குமார் ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்ததன் படி ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்துவிட்டார். அவரது விளக்கம் ஒழுங்கு நடவடிக்கை குழுவினரால் ஏற்கப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து சட்டமன்றப் பேரவை உறுப்பினர் கே.ஆர். ராமசாமி செய்தியாளர்களின் சந்திப்பில் : "சத்தியமூர்த்தி பவன் மோதல் தொடர்பாக நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள ரூபி மனோகரன் மீது 63 மாவட்டத் தலைவர்கள் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக அல்ல. அதனால் அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குகிறோம். அடுத்து நடைபெறும் தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ஆஜராகி உரிய ஆதாரங்களை ரூபி மனோகரன் சமர்ப்பிக்க வேண்டும்" என கே ஆர்.ராமசாமி தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளரான தன்னை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்ய முடியாதென்றும் இதுகுறித்து டெல்லி மேலிடம் தான் முடிவெடுக்கும் என்றும் ரூபி மனோகரன் தெரிவித்திருந்த நிலையில் தான் ரூபி மனோகரன் மீதான இடைநீக்க உத்தரவு நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சஸ்பெண்ட் உத்தரவை நிறுத்தி வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்