ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் காசி தமிழ் சங்கமம்: ஜி. கே. வாசன் தகவல்
வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ஜி. கே. வாசன் இன்று கலந்து கொண்டார்.
அப்போது சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அளித்த பேட்டியில், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நமது கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்தை பேணிக்காப்பது தான் நமது கடமை என்றும், இந்த கடமையை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திரமோடி காசி தமிழ் சங்கத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார் என்றும் தெரிவித்தார். ராமேஸ்வரம் - காசி இடையேயான தொடர்பை புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த உறவை மெருகேற்றி, ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்வு காசியில் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
மேலும், இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்திற்கான விழாவாக இது நடைபெறுவது வாழ்த்துக்குரியது, பாரட்டுக்குரியது என்றும், இந்த விழாவிற்காக தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 5வது தொகுப்பு தமிழ் பிரதிநிதிகள் வாரணாசி சென்றனர்
ஒருமாத காலம் நடைபெறும் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 5-வது தொகுப்பு தமிழ் பிரதிநிதிகள் வாரணாசி சென்றனர். 216 பேரைக் கொண்ட இந்தக் குழுவினருக்கு வாரணாசி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உடுக்கை அடித்து மலர்கள் தூவி அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பில் விருந்தினர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தக் குழுவில் தமிழ்நாடு தவிர புதுச்சேரி மற்றும் இதர பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். பாபா விஸ்வநாதர் ஆலயத்தை அடைந்த போது, இவர்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு விஸ்வநாதரை தரிசித்த பின் அன்னை அன்னபூரணி ஆலய வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாரணாசியின் பல்வேறு பாரம்பரிய இடங்களுக்கும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும், சந்தைகளுக்கும் விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் பின்னர், மாலையில் பெரிய படகு ஒன்றில் துறவி ரவிதாஸ், படித்துறைக்கு சென்ற தூதுக்குழுவினர் மற்ற படித்துறைகளுக்கும் சென்று கங்கா ஆர்த்தியை கண்டு களித்தனர். இதையடுத்து இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை,காவிரி சங்கமத்திற்கு ஒப்பானது: காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் வெங்கட்ரமண கனபாடிகள் கருத்து
காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை காவிரி சங்கமத்திற்கு ஒப்பானது என்று காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் கே. வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து காசி சென்று 5-வது தலைமுறையாக வாழுகின்ற குடும்பத்தைச் சேர்ந்த இவர், முதன் முறையாக காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினராக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காசி தமிழ் சங்கமத்தையொட்டி, பத்திரிகை தகவல் அலுவகத்திற்கு சிறப்பு பேட்டியளித்த வெங்கட்ரமண கனபாடிகள், பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு முதன் முறையாக காசி தமிழ் சங்கமத்திற்கு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. காசியில் கங்கை இருக்கிறது, விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர், சோயி அம்மன் இருக்கிறார்கள். கங்கையில், புனித நீராடவும், கடவுள்களை தரிசிக்கவும், தமிழ் நாட்டின் கிராமங்களில் உள்ளவர்கள் கூட ஒரு முறையாவது வரவேண்டும் என்று விரும்புவார்கள். ஏற்கனவே வந்தவர்களைவிட இப்போது கூடுதலாக வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் வருகையால் காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
காசிநாதர் ஆலயம் மிகக் குறுகலாக சுமார் 1,000 பேர் வரைதான் ஏற்கெனவே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், தமிழ்நாட்டிலிருந்தும் தென்மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் காசிக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, விஸ்வநாதர் ஆலயத்தை விரிவாக்க உறுதி மேற்கொண்டார். இதனால், கடல் போல் பரந்த பிரகாரமாக விரிவுப்படுத்தியிருக்கிறார். இப்போது தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்யமுடியும். முன்பெல்லாம் அன்னதானம் இல்லை, கடந்த ஆறு மாதமாக கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்யப்படுவதோடு பிரசாதமும் வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
உலகத்திலேயே கிடைக்காத மணிகர்னிகா தீர்த்தம், விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகிலேயே உள்ளது. இந்த தீர்த்தத்தை கையில் எடுத்து வந்து நேரடியாக விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்று வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்தார்.
கோவில் வளாகத்தில் பிரமாண்டமான கலையரங்கு கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கோவில்களில் பாராயணங்களும், கச்சேரிகளும் நடப்பது போல் காசியிலும் நடத்துவதற்கு வசதியாக இந்தக் கலையரங்கு அமைந்துள்ளது என்பதை அவர் பெருமையாகக் குறிப்பிட்டார்.
கருத்துகள்