சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வாரணாசியில் வரும் 10-ஆம் தேதி உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினக் கொண்டாட்டம்
உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம் 2022-ஐ முன்னிட்டு உத்தரப்பிரதேசம் வாரணாசியில், 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், இரண்டு நாள் மாநாட்டுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல், இந்த இரண்டு நாள் மாநாட்டை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோர் முன்னிலையில், தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாடு, ருத்திராட்ச மண்டபத்தின் மாநாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் இதில் கலந்து கொள்வார்கள். மேலும், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை, சுகாதார இயக்கங்களின் பிரதிநிதிகள், சமுதாய சுகாதார அதிகாரிகள், நலவாழ்வு மையங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டு, 2017ஆம் ஆண்டு முதல், கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் கருப்பொருள், “நாம் விரும்பும் உலகை உருவாக்குவோம்: அனைவருக்குமான ஆரோக்கிய எதிர்காலம்” என்பதாகும். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்கும் மூன்று அமர்வுகள் நடைபெறும்
கருத்துகள்