800 மில்லியன் பிராட்பேண்ட் பயனாளர்களுடன் உலகின் மிகப்பெரிய ‘இணைந்த’ நாடாக இந்தியா திகழ்கிறது: மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்
சுமார் 800 மில்லியன் பிராட்பேண்ட் பயனாளர்களுடன் உலகின் மிகப்பெரிய ‘இணைந்த’ நாடாக இந்தியா தற்போது திகழ்வதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
‘இந்தியாவிற்கு அதிகாரமளிப்பதற்கு தொழில்நுட்ப யுகத்தின் பயன்பாடு’ என்ற கருப்பொருளில் நேற்று நடைபெற்ற இந்திய இணைய ஆளுகை மன்றம் 2022-இன் நிறைவு விழாவில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு அல்கேஷ் குமார் ஷர்மா மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பாரத் நெட் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மிக அதிகளவில் பிராட்பேண்ட் இணைப்புகள் மற்றும் ஐந்தாம் தலைமுறை இணைப்புகள் முதலியவை 1.2 பில்லியன் இந்திய பயனாளர்களை உருவாக்குவதுடன் சர்வதேச இணைய உலகில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்றும் அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கூறினார். மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கொள்கைகளும், தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்புகளும் விரைவில் கொண்டுவரப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஆளுகையின் மாதிரியில் தங்கள் நாடுகளை மாற்ற விரும்பும் சர்வதேச தெற்கு நாடுகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் ஜி20 தலைமைத்துவத்தின் போது அறிவித்திருந்ததை அமைச்சர் நினைவுகூர்ந்தார். இணையம் வளர்வதையும், புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெறுவதையும் உறுதி செய்யும் அதே வேளையில், இந்தியாவின் அனைத்து டிஜிட்டல் பயனாளர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கருத்துகள்