65 வது நிறுவன தினத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) நாளை கொண்டாடுகிறது.
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) தனது 65வது நிறுவன நாளை 2022 டிசம்பர் 5-6 தேதிகளில் கொண்டாடுகிறது. மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விளம்பரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரியுடன் இணைந்து 2 நாள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) என்பது இந்திய அரசின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) மேற்பார்வையின் கீழ், கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மையான உளவுத்துறை மற்றும் அமலாக்க நிறுவனமாகும். இது 4 டிசம்பர் 1957 இல் நடைமுறைக்கு வந்தது. புதுதில்லியில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ள டிஆர்ஐ, 12 மண்டலப் பிரிவுகள், 35 பிராந்தியப் பிரிவுகள் மற்றும் 15 துணை மண்டலப் பிரிவுகளை உள்ளடக்கி, அதில் சுமார் 800 அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் டிஆர்ஐ, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் போதைப்பொருட்கள், தங்கம், வைரங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், வனவிலங்கு தொடர்பான பொருட்கள், சிகரெட்டுகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், கள்ளநோட்டுகள், வெளிநாட்டுப் பணம், அபாயகரமான மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய பொருட்கள், பழங்காலப் பொருட்கள் போன்றவை தொடர்பாக நடைபெறும் குற்றச்செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்கும்.
இந்தாண்டு "இந்தியாவில் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள்- தொடர்பான அறிக்கை 2021-22"-யை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் வெளியிடுகிறார். கடத்தல் தடுப்பு மற்றும் வணிக மோசடி தொடர்பாக டிஆர்ஐ மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டிருக்கும்.
கருத்துகள்