மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் 65-வது நிறுவன தினக்கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தார்
மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் 65-வது நிறுவன தினக் கொண்டாட்டத்தை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். புதுதில்லியில் உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் கீழ் வருவாய் புலனாய்வு இயக்குனரகம், கடத்தல் தடுப்பு புலனாய்வு மற்றும் விசாரணை முகமை ஆகியவை இயங்கி வருகின்றன. விழாவில் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் அதிகாரிகளின் மகத்தான பணிகளை வெகுவாக பாராட்டினார். ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயித்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மற்ற அமலாக்கத்துறை ஏஜென்சிகளுக்கு உதாரணமாகத் திகழ்வதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் குறிப்பாக தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்படுவதை தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார். விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்ட காலத்தில், நாடு முழுவதும் 14 இடங்களில், 44 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருள் பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருப்பது,
வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகத்தின் வல்லமையை பறைசாற்றுவதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். போதைப் பொருள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் மூளையாக செயல்படுவோரையும், நிதியுதவி அளிப்பவர்களையும் கைது செய்ய வேண்டியது
அவசியம் என்றார். நவீன தொழில்நுட்பம், தர ஆய்வுகளை பயன்படுத்தி தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், சமூகவிரோத சக்திகள் தகவல்களைத் திருடுவதைத் தடுக்கவும்,
கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் 2022-ம் ஆண்டுக்கான டிஆர்ஐ (வருவாய் புலனாய்வு இயக்குனரகம்) துணிச்சல் விருதும், 2022-ம் ஆண்டுக்கான உத்கிரிஷ்ட் சேவா சமான் விருதும் வழங்கப்பட்டது. நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி, வருவாய்த்துறை செயலாளர் திரு சஞ்சய் மல்கோத்ரா, சிபிஐசி தலைவர் திரு விவேக் ஜெஹ்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்