கோவாவில் ஸ்வாஹித் தினம்
கடைப்பிடிப்பு- மத்திய அமைச்சர் திரு.சர்பானந்தா சோனாவால், வரலாற்று சிறப்பு மிக்க அசாம் இயக்கத்தின் தியாகிகளுக்கு
கோவாவில் இன்று ஸ்வாஹித் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய துறைமுகம், கப்பல், நீர்வழி மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு.சர்பானந்தா சோனாவால் கலந்துகொண்டு, வரலாற்று சிறப்பு மிக்க அசாம் இயக்கத்தின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
1979ம் ஆண்டு நடைபெற்றப் போராட்டத்தில் பங்கேற்று தன்னுயிரை ஈந்த கார்கீஸ்வர் தலுக்தர் நினைவாக டிசம்பர் 10ம் தேதி ஸ்வாஹித் தினமாக, தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பஞ்ஜிமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் திரு. சர்பானந்தா சோனாவால் பங்கேற்றார். கோவா அசாமி சமூகத்தினர் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், 1979 முதல் 1985 வரை 6 ஆண்டுகள் நடைபெற்ற அசாம் இயக்கத்தின் போராட்டத்தை நினைவுகூர்ந்தார். அசாமைப் பாதுகாப்பதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக அவர் கூறினார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களிடம் இருந்து, தங்கள் மாநிலத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்லாமல், ஒற்றுமையையும் இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காகவும், 860 வீரர்கள் உயிர்தியாகம் செய்ததைச் சுட்டிக்காட்டினார்.
இதன்மூலம்அசாம் மக்கள் ஈடுஇணையற்ற தேசப்பற்றையும், துணிவையும் முன்னிறுத்தி, மறக்கமுடியாத வரலாற்றை, எழுதியிருப்பதாக அவர் தெரிவித்தார். அசாம் சமூகத்தினரின் இந்த தியாகம், தேச மக்களுக்கு என்றும் உத்வேகமாகத் திகழும் என்று குறிப்பிட்ட அவர், கடின உழைப்பு, நேர்மை உள்ளிட்ட இந்த தியாகிகளின் கொள்கைகளுக்கு உயிர்கொடுக்கும் முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், இந்த தேசத்தின் மொழி, கலாச்சாரம், பாராம்பரியம், உள்ளிட்டவற்றைக் காக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு என திரு.சர்பானந்தா சோனாவால் குறிப்பிட்டார்.
கருத்துகள்