உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் முதல் பெண் ‘சோப்தார்’ நியமனம்
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் ‘சோப்தார்’ லலிதா.
மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் சோப்தாராக லலிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்ற அரங்குக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்பாக 'சோப்தார்' எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை கொடுத்துக் கொண்டே செல்வது வழக்கம். இவர்கள் நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது என நீதிபதிகளின் அன்றாடப் பணிகளையும் செய்கின்றனர். இதுவரை ஆண்கள் தான் சோப்தார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு 40 சோப்தார் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தியது. இதில் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதிகளுக்கு பெண் சோப்தார் நியமிக்கும் வகையில் 20 பெண் சோப்தார்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் கடந்தாண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நீதிபதி மாலாவுக்கு சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரையை சேர்ந்தவர். சோப்தார் பணியில் சேர்ந்தது பெருமையாக இருப்பதாக லலிதா தெரிவித்தார்.
கருத்துகள்