காடுகள் இந்திய நெறிமுறைகள், உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கிய பகுதியாகத் திகழ்கின்றன: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று அழைப்பு விடுத்துள்ளார். இயற்கை வளங்களை பொறுப்பற்ற முறையில் சுரண்டுவது குறித்து கவலை தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், மனித இனம் பூமியைத் தமது பிரத்தியேகச் சலுகையாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய வனத்துறையின் 2021ம் ஆண்டு பிரிவுப் பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசுத் துணைத் தலைவர் இன்று கலந்துரையாடினார். வனப் பாதுகாப்பில் இந்திய வனப் பணி அதிகாரிகளின் முக்கியப் பங்கைச் சுட்டிக் காட்டிய அவர், பழங்குடி மக்களுடன் பழகி அவர்களின் பழமையான கலாச்சாரத்தின் அனுபவத்தைப் பெறுபவர்களாக வனப் பணி அதிகாரிகள் உள்ளனர் என்று குறிப்பிட்டார். பழங்குடி மக்களின் தேவைகளை நிறைவேற்ற சேவை செய்ய உங்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைப்பதாக வனப் பணி அதிகாரிகளிடம் குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.
காடுகளின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய திரு ஜக்தீப் தன்கர், காடுகள் இந்திய நெறிமுறைகள், உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கிய பகுதியாக உள்ளன என்றார். வன வளத்தில் உலகின் முதல் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று குறிப்பிட்ட அவர், இயற்கைக்குச் சேவை செய்வதுடன் மனிதகுலத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினார். இந்த அதிகாரிகள் 'இயற்கையின் தூதர்கள்' என்று குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார்.
சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், மனிதர்களின் பேராசையால் பொதுவான கிராம நிலங்கள் மற்றும் இயற்கை நீர் நிலைகள் போன்ற வளங்கள் குறைந்து வருவது கவலையளிக்கிறது என்றார்.
அரசுக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளின் ஒரு பகுதியாக 'காடுகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு' ஆகியவற்றை உள்ளடக்கியதாக அரசியலமைப்பை உருவாக்கியதற்காக, அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களின் தொலைநோக்குப் பார்வையைக் குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். மக்களுக்கு, இயற்கைப் பாதுகாப்பு போன்ற அடிப்படைக் கடமைகளைச் சேர்க்கும் வகையிலும் சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்ற நோக்கிலும் அரசியலமைப்பு திருத்தப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மக்களை ஈடுபடுத்துவதற்கும் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கும் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
குடியரசுத் துணைத் தலைவரின் செயலாளர் திரு சுனில் குமார் குப்தா, மாநிலங்களவைச் செயலாளர் திரு பி.சி. மோடி, வனத் துறைத் தலைமை இயக்குநர் திரு சி.பி. கோயல் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்