மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா எல்லைப் பாதுகாப்பு படையினருக்கான ‘பிரஹாரி’ மொபைல் செயலியை புதுதில்லியில் இன்று அறிமுகம் செய்ததுடன் திருத்தப்பட்ட 13 கையேடுகளையும் வெளியிட்டார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித்ஷா எல்லைப் பாதுகாப்பு படையினருக்கான ‘பிரஹாரி’ மொபைல் செயலியை புதுதில்லியில் இன்று அறிமுகம் செய்ததுடன் திருத்தப்பட்ட 13 கையேடுகளையும் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, எல்லைப் பாதுகாப்புப் படைக்கான இந்த பிரஹாரி செயலி செயலுக்கமான நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார். தற்போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை இந்த செயலியின் மூலம் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். குறைதீர்ப்பு நடைமுறைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்பதுடன் எல்லைப் பாதுகாப்புப் படைவீர்ர்களுக்கான நலத்திட்டங்களையும் இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகள், நிர்வாகம், பயிற்சி உள்ளிட்டவை தொடர்பான 13 திருத்தப்பட்ட கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளதற்கு இந்த படையின் தலைமை இயக்குநர் திரு பங்கஜ் குமாருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக கூறிய அவர் அரசு நடவடிக்கைகள் இந்தப் படையினரின் வசதிகளை அதிகரிக்கும் என்றும் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தை அறிமுகம் செய்ததை சுட்டிக் காட்டிய திரு அமித்ஷா இந்த திட்டத்தின் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தங்களது பங்களிப்பை வழங்கி எல்லைப் பகுதி கிராமங்கள் தன்னிறைவு அடைய பணியாற்ற வேண்டும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தப் படையினரின் துணிச்சல் மிக்க பணியைப் பாராட்டி ஏராளமான வீர தீர செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் படையினருக்கு ஒரு மகாவீர் சக்ரா, 4 கீர்த்தி சக்ரா, 13 வீர சக்ரா மற்றும் 13 ஷவுரிய சக்ரா விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 3 ஆண்டுகளில் இந்தப் படையினர் 26,000 கிலோ போதைப் பொருட்கள், 2,500 ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார். கடந்த 6 மாதங்களில் மேற்கு எல்லைப் பகுதிகளில் சதித்திட்டத்துடன் பறந்த 22 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எல்லைகளில் இந்தப் படையினர் மைனஸ் 40 முதல் 46 டிகிரி வெப்ப நிலையில் பணியாற்றுவதாக கூறிய அவர் இந்தப் படையினர் நாட்டை எவ்வாறு பாதுகாக்கிறார்களோ அதே போல அரசு அவர்களது குடும்பத்தினர் மீது அக்கறை செலுத்துவதாக தெரிவித்தார்.
கருத்துகள்