13 ஆவது தேசிய வாக்காளர் தினம் நாடுமுழுவதும் கொண்டாட்டம்
13 ஆவது தேசிய வாக்காளர் தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு பங்கேற்றார்.
இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு அனுப் சந்திர பாண்டே, திரு அருண் கோயல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கான நடைமுறை உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சீர்திருத்தங்கள் தொடர்பான அனைத்து முடிவுகளும், அரசியல் கட்சிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், 1951 ஆம் ஆண்டு 17 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 94 கோடியாக அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிகபட்சமாக 67.4 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், அனைவரும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்களில் வாக்காளர்கள் அதிக உத்வேகத்துடன் வாக்களிக்க முன்வருவதாகவும், தேர்தல் நடைமுறையை பலப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்கி வருவதையும் நினைவுகூர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வாக்குப்பதிவு நடைமுறைக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.13-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
புதுதில்லியில் இன்று நடைபெற்ற 13-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் 2022ம் ஆண்டில், தேர்தல்களை மிகச்சிறப்பாகவும், திறமையாகவும் நடத்திய மாவட்ட, மாநில அளவிலான அதிகாரிகளுக்கு தேசிய விருதுகளை வழங்கினார். வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய அரசு ஊடகம், தகவல் அமைப்புகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முக்கிய துறையினருக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் மக்களின் அறிவுக் கூர்மையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்ததாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையில், வயதுவந்தோருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்திய வாக்காளர்கள், அந்த முன்னோடிகளின் நம்பிக்கையை உண்மையாக்கியுள்ளதாகத் தெரிவித்த குடியரசுத் தலைவர், இந்திய ஜனநாயகம், உலகின் மிகப்பெரிய எழுச்சி மிக்க நிலையான ஜனநாயகம் என்றும் மதிக்கப்படுவதாக கூறினார்.
கடந்த 70 ஆண்டுகளாக தேர்தல் நடைமுறைகள் மூலம் நமது நாட்டின், சமூகப் புரட்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறிய குடியரசுத் தலைவர், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் சாதாரண வாக்காளர்கள், தங்களது மாநிலம் அல்லது நாட்டை யார், எப்படி ஆளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிகப்பெரிய முடிவுகளை எடுப்பது நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றியாகும் என்று தெரிவித்தார். நமது ஜனநாயகம், அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல், நீதியை எட்டும் வகையில், தொடர்ந்து முன்னேறிச் செல்வதாக அவர் கூறினார். தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தலுடன் தொடர்புகொண்ட அனைவரது ஒருமித்த முயற்சிகள் காரணமாக நமது ஜனநாயகம் மேலும் வலுவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற குறிக்கோளுடன் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது என்று கூறிய குடியரசுத் தலைவர், தேர்தல் நடைமுறைகளை அனைத்து வாக்காளகளுக்கும் எளிதாக்கியிருப்பது தேர்தல் ஆணையத்தின் வெற்றியாகும் எனக் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர்களின் கூட்டு முயற்சியால் நாட்டில் தேர்தல் நடைமுறைகள் வலுவடைந்துள்ளதாக தெரிவித்த அவர், நாடு மிக முக்கியமானது என்ற உணர்வுடன் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தேர்தல் நடைமுறைகளில் மகளிர் பங்கேற்பு அதிகரித்து வருவது நமது ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையின் மிகப்பெரிய சாதனை என்று கூறியுள்ள குடியரசுத் தலைவர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதை சுட்டிக்காட்டினார். நமது நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக இரு அவைகளையும் சேர்த்து பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 என்ற அளவை தாண்டியுள்ளதை அவர் குறிப்பிட்டார். கிராமப் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், அவர்களது பங்கேற்பு மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தலைமைத்தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் வெளியிட்ட “முதல் குடிமகனைத் தேர்த்தெடுத்தல்” என்ற நூலை குடியரசுத் தலைவர் பெற்றுக்கொண்டார். நாட்டின் குடியரசுத்தலைவர் தேர்தல்கள் குறித்த வரலாற்றுப் பயணத்தை இந்த நூல் விவரிக்கிறது.
2011ம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி நிறுவப்பட்டதை குறிக்கும் வகையில், இந்த விழா கொண்டாடப்படுகிறது. புதிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், இந்த தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
கருத்துகள்