மத்திய பிரதேசம், இந்தூரில் 17-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் தொடங்கிவைத்தார்
‘பாதுகாப்பாக செல்லுங்கள்: திறன் பெற்று செல்லுங்கள்’ நினைவு தபால்தலையை வெளியிட்டார்
மத்திய பிரதேசம் இந்தூரில் 17-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோதி இன்று தொடங்கிவைத்தார். பாதுகாப்பாக செல்லுங்கள் திறன் பெற்று செல்லுங்கள் நினைவு தபால்தலையையும் பிரதமர் வெளியிட்டார். அத்துடன், விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்ற கருப்பொருளில் இந்திய சுதந்திர போராட்டத்தில் வம்சாவளியினரின் பங்களிப்பு குறித்த முதலாவது டிஜிட்டல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின கண்காட்சியையும் அவர் திறந்துவைத்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு இந்திய அரசின் முக்கியமான நிகழ்வாகும். வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் வகையில், இது ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தாண்டின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் கருப்பொருள் ‘வம்சாவளியினர்’ அமிர்த காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கான நம்பத்தகுந்த கூட்டாளிகள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டிற்காக சுமார் 70 நாடுகளைச்சேர்ந்த 3500 வம்சாவளியினர் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நான்கு வருடங்களுக்கு பிறகு தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 130 கோடி இந்தியர்கள் சார்பாக அனைவரையும் தாம் வரவேற்பதாக பிரதமர் கூறினார். இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும், புனித நர்மதா நதியால் புகழ்பெற்ற, பசுமையான, பழமையான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக தலமான மத்திய பிரதேச மாநில மண்ணில், இம்மாநாடு நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.
அண்மையில் அர்ப்பணிக்கப்பட்ட மகா கால், மகா லோக் குறித்து குறிப்பிட்ட பிரதமர், மாநாட்டு பங்கேற்பாளர்களும், பிரதிநிதிகளும் புனிதத்தலங்களுக்கு செல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாநாடு நடைபெறும் இந்தூர் நகரம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தூர் ஒரு நகரம் என்பதோடு அது ஒரு கால கட்டமாகவும் உள்ளது என்று கூறினார். அதன் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே நேரத்தில் முன்னோக்கிய காலகட்டத்தை நோக்கி அது செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். சமையலுக்கு புகழ்பெற்ற நகரமாக இந்தூர் விளங்குவதாகவும், தூய்மை இயக்கத்தில் இது சாதனைபடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75-ம் ஆண்டு அண்மையில் நிறைவடைந்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் எண்ணிலடங்கா வழிகளில் சிறப்பு வாய்ந்தது என்று கூறினார்.
விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்ற கருப்பொருளில் முதலாவது டிஜிட்டல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது புகழ்மிக்க சகாப்தத்தை மீண்டும் அடைவதாக தெரிவித்தார். அமிர்தக்காலத்தின் அடுத்த 25 ஆண்டு காலத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்களிப்பு குறித்து குறிப்பிட்ட அவர், அமிர்த காலத்தின் போது வெளிநாடு வாழ் இந்தியர்களால் இந்தியாவின் தனித்துவமிக்க உலகளாவிய பார்வை வலுப்பெறும் என்று கூறினார்.
உலகம் முழுவதையும் சொந்த நாடாக எண்ணி, மனிதநேயத்தை நமது சகோதர சகோதரிகளாகக் கருதும் இந்தியாவின் தத்துவத்தை குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் கலாச்சார விரிவாக்கத்திற்கு நமது முன்னோர்கள் அடித்தளமிட்டதாகக் கூறினார். இன்றைய உலகம் குறித்து பேசிய பிரதமர், இந்தியர்கள் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளுக்கு மத்தியில் வாழும் போது உலகின் அனைத்துப் பகுதிகளையும், கடந்து வந்துள்ளனர் என்றும், வணிக கூட்டு மூலம் செம்மையான முறைகளை காண்பதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளனர் என்றும் விளக்கினார்.
உலக வரைபடத்தில் கோடிக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்களை காணும் போது, இரண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்தித்துக்கொள்ளும் போது, இது 'வசுதைவ குடும்பகம்' மற்றும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். "வெளிநாடு வாழ் இந்தியர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் மிகவும் ஜனநாயக, அமைதியான மற்றும் ஒழுக்கமான குடிமக்களாக கருதப்படும் போது,ஜனநாயகத்தின் தாய் என்ற பெருமை பன்மடங்கு அதிகரிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியரையும் இந்தியாவின் தேசிய தூதர் என்று அழைப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். ஏனென்றால், உலகம் அவர்களின் பங்களிப்பை மதிப்பிடும் போது சக்திமிக்க மற்றும் திறமையான இந்தியாவின் குரலை எதிரொலிப்பதாக கூறினார். "நீங்கள் இந்தியாவின் பாரம்பரியம், இந்தியாவில் உற்பத்தி செய்வோம், யோகா மற்றும் ஆயுர்வேதம், இந்தியாவின் குடிசைத் தொழில்கள் மற்றும் கைவினைப்பொருட்களின் தேசிய தூதர்கள்", என்று மோடி தொடர்ந்து பேசினார். அதே நேரத்தில், நீங்கள் இந்தியாவின் சிறு தானியங்களின் தூதர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், சில சிறு தானிங்களை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உலகத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்வதில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மற்றொரு முக்கியப் பங்கு உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். உலகம் இந்தியாவை மிகுந்த ஆர்வத்துடன் உற்று நோக்குவதாக கூறிய அவர், அண்மை கால ஆண்டுகளின் நாட்டின் பெரும் சாதனைகளை எடுத்துரைத்தார். இந்தியாவில் உற்பத்திசெய்யப்பட்ட தடுப்பூசியை உதாரணமாக கூறிய அவர், 220 கோடிக்கும் அதிகமான இலவச தடுப்பூசிகள் இந்தியர்களுக்கு செலுத்தப்பட்டதன் சாதனை புள்ளி விவரங்களை பிரதமர் விளக்கினார். தற்போது நிலவும் நிலையற்ற தருணத்தின் போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியா உருவாகியதையும், உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மின்னணு உற்பத்தித் துறையில் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மேக் இன் இந்தியா போன்றவற்றின் உதாரணங்களையும் பிரதமர் விளக்கினார். தேஜாஸ் போர் விமானங்கள், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் ஐஎன்எஸ் விக்ராந்த், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரிஹந்த் போன்றவற்றை எடுத்துக்கூறிய அவர், இந்தியாவைப் பற்றி உலக மக்கள் ஆர்வமாக இருப்பது இயற்கையான ஒன்று என்று கூறினார். இந்தியாவின் ரொக்கமில்லா பொருளாதாரம் மற்றும் ஃபின்டெக் ஆகியவற்றைக் குறிப்பிட்ட பிரதமர், உலகின் 40 சதவீத மின்னணு பரிவர்த்தனைகள் இந்தியாவில் செய்யப்படுவதாக கூறினார். விண்வெளி தொழில்நுட்பம் குறித்து பேசிய பிரதமர், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இந்தியா பல சாதனைகளை படைத்து வருகிறது என்று தெரிவித்தார். இந்தியாவின் மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்பத் துறை குறித்து பேசிய அவர், அதனுடைய திறன் அதிகரித்து வருவதாகவும் கூறினார். "இந்தியாவின் செய்தி, அதன் தனித்துவமான முக்கியத்துவம் வாய்ந்தது", நாட்டின் பலம் எதிர்காலத்தில் ஒரு ஊக்கத்தை அடையும் என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றி மட்டுமின்றி, நாட்டின் முன்னேற்றம் பற்றியும் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஜி-20 தலைமைத்துவத்தை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுக்கொண்டு இருப்பதையும் இந்தியாவின் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்று நீடித்த எதிர்காலத்தை அடைவது குறித்து உலகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகத்தான வாய்ப்புடன் இந்த பொறுப்பு கிடைத்திருப்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். ஜி-20 தலைமை என்பது வெறுமனே ராஜீய நிகழ்வு அல்ல. இதனை ‘அதிதி தேவோ பவ’ என்ற உணர்வின் சாட்சியாக பொது மக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாற்றப்படவேண்டும் என்று பிரதமர் கூறினார். ஜி-20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 200-க்கும் அதிகமான சந்திப்புகள் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இது மகத்தான வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலம் தத்தம் நாடுகளுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கையையும், போராட்டத்தையும் ஆவணப்படுத்துவதற்கான நீடித்த முயற்சிகள் இருக்க வேண்டும் என்பது பற்றியும் பிரதமர் யோசனை தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர்களான கயானா கூட்டுறவு குடியரசு அதிபர் டாக்டர் முகமது இர்ஃபான் அலி, சுரிநாம் குடியரசு அதிபர் திரு சந்திரிகாபெர்சாத் சாந்தோகி ஆகியோரின் உரை மற்றும் ஆலோசனைகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
கயானா கூட்டுறவு குடியரசு அதிபர் டாக்டர் முகமது இர்ஃபான் அலி, சுரிநாம் குடியரசு அதிபர் திரு சந்திரிகாபெர்சாத் சாந்தோகி, மத்திய பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், ஆளுநர் திரு மங்குபாய் படேல், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய இணையமைச்சர்கள் திருமதி மீனாட்சி லெக்கி, திரு வி. முரளீதரன், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பின்னணி
வெளிநாடுவாழ் இந்தியர்தின மாநாடு என்பது இந்திய அரசின் முக்கியமான நிகழ்வாகும். வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான முக்கிய தளத்தை இது வழங்குகிறது. இந்திய வம்சாவளியினர் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடவும் இது வகைசெய்கிறது. மத்தியப்பிரதேச அரசின் பங்களிப்புடன் 17-வது வெளிநாடுவாழ் இந்தியர்தின மாநாடு 2023 ஜனவரி 8 முதல் 10 வரை இந்தூரில் நடைபெற உள்ளது. “இந்திய வம்சாவளியினர்: அமிர்த காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு நம்பகமான கூட்டாளிகள்” என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாகும். இந்த மாநாட்டிற்காக சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் பதிவு செய்துள்ளனர்.
பாதுகாப்பான, சட்டப்படியான, முறைப்படியான குடிபெயர்வு என்பதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டும் வகையில், நினைவு அஞ்சல்தலை ஒன்றும் வெளியிடப்படும். “சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா – இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு” என்ற மையப் பொருளில் முதல் முறையாக டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் தொடங்கிவைத்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டின் அமர்வுகள் 5 மையப்பொருட்களில் இருக்கும் –
‘புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்களின் பங்கு’ குறித்த முதலாவது அமர்வுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக்சிங் தாக்கூர் தலைமை தாங்குவார்.
‘அமிர்த காலத்தில் இந்திய சுகாதார சூழலை மேம்படுத்துவதில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு: விஷன்@2047’ என்ற 2-வது அமர்வுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும், வெளியுறவுத்துறை இணையமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கும் கூட்டாக தலைமை தாங்குவார்கள்.
‘இந்தியாவின் மென்மையான ஆற்றலை மேம்படுத்துதல்- கைவினை, உணவு மற்றும் ஆக்கப்பூர்வ கலைப்படைப்பின் மூலமான நல்லெண்ணம்’ என்ற 3-வது அமர்வுக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி தலைமை தாங்குவார்.
‘இந்திய உழைக்கும் சக்தியின் உலகளாவிய இடம்பெயரும் திறன்- இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு’ என்ற 4-வது அமர்வுக்கு கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திரபிரதான் தலைமை தாங்குவார்.
‘தேசத்தின் கட்டமைப்புக்கு அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி வெளிநாடு வாழ் இந்திய தொழில்முனைவோரின் திறனை பயன்படுத்துதல்’ என்ற 5-வது அமர்வுக்கு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குவார்.
இந்த அனைத்து அமர்வுகள் மீதான குழு விவாதத்திற்கு வெளிநாடு வாழ் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு பிறகான முதலாவது மற்றும் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் நேரடியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் 17-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. பெருந்தொற்றுக்காலத்தில் வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாடு 2021-ல் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.
கருத்துகள்