தேசிய மகளிர் ஆணையத்தின் 31-வது நிறுவக தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் நாளை உரையாற்றவுள்ளார்
தேசிய மகளிர் ஆணையத்தின் 31-வது நிறுவன தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 31,2023) உரையாற்றவுள்ளார். வலிமையான மகளிர் வலிமையான பாரதம் என்ற பொருளில் சிறப்பு வாய்ந்த பெண்களை பற்றியும், அவர்களின் பயணத்தை கொண்டாடும் வகையிலும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி, இணையமைச்சர் டாக்டர் முஞ்ச்பாரா மகேந்திரபாய் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.
தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள், தூதரக பிரதிநிதிகள், சட்டப்பிரதிநிதிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், ராணுவ மற்றும் துணை ராணுவ அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில சட்ட சேவை ஆணைய உறுப்பினர்கள், தேசிய மகளிர் ஆணைய ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆணையத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவன உறுப்பினர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
2023, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை இரண்டு நாட்களுக்கு 31-வது தேசிய மகளிர் ஆணைய நிறுவன தின கொண்டாட்டத்திற்கு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
தேசிய மகளிர் ஆணைய சட்டம் 1990-ன் கீழ் சட்டப்பூர்வ அமைப்பாக தேசிய மகளிர் ஆணையம் 1992-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. மகளிருக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட பாதுகாப்புகளை ஆய்வு செய்யவும், குறைகளை தீர்க்கவும், மகளிரை பாதிக்கும் கொள்கை முடிவுகள் விஷயத்தில் அரசுக்கு ஆலோசனை வழங்கவும் இது உருவாக்கப்பட்டது.
கருத்துகள்