நீர்வளத் துறை அமைச்சகம் கொல்கத்தாவில் உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தை பிரதமர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவின் ஜோகாவில் உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் சுமார் ரூ.100 கோடி மதிப்பில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பர் சாலையில் ஜோகா என்ற இடத்தில் 8.72 ஏக்கர் நிலபரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமை நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் மூலம், குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலப் படிப்புகள் மூலம் பொது துப்புரவு பொறியியல் மற்றும் துப்புரவுத் துறையில் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டு இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்துடன் மேலாண்மை, சுகாதாரம், கணக்கியல், சட்டம் மற்றும் பொதுக் கொள்கைகளின் அம்சங்களையும் உள்ளடக்கியது.
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தின் திறப்பு விழாவைத் தொடர்ந்து, குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு, யுனிசெப், இன்ரம் அறக்கட்டளை, குடிநீர் ஆதாரம் ஆகிய அமைப்புகளின் உதவியுடன் ‘குடிநீரின் தரம்– பிரச்சனைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய மாநாடு நடைபெற்றது.
மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை தாங்கினார்.
மத்திய அமைச்சர் ஷெகாவத், பிரதமரின் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியதோடு, தூய்மை இந்தியா திட்டம், நமாமி கங்கா திட்டம், ஜல் ஜீவன் மிஷன் ஆகியவற்றின் கீழ், ஒருங்கிணைந்த முயற்சிகள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். “நாம் ஒன்றாகச் செயல்பட்டால், நீர் பாதுகாப்பையும், நீர் மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகள் சிறப்பான வகையில் கிடைக்கும் என்றார். பொது சுகாதார பொறியியல் துறைகள் இல்லங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்த பிறகு, புதிய சவால் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றார்.
அனைத்து குடிமக்களுக்கும் குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதிபடக் கூறினார்.
"இந்த முயற்சியில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அனைத்து மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இந்த நிறுவனத்தில் உள்ள வசதிகளை திறன் மேம்பாடு மற்றும் களபணியாளர்களுக்கு பயிற்சிக்காக பயன்படுத்த வேண்டும்" என்றார்.
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளர் திருமதி வினி மகாஜன் பேசுகையில், மாநிலங்கள் தண்ணீர் சேவை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தண்ணீர் சேவை வழங்குவதில் உள்ள சிக்கல்களைப் பட்டியலிடவும், விவாதிக்கவும், திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வெளியிடவும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
"தண்ணீரின் தரத்தை ஆய்வகங்களில் தவறாமல் பரிசோதிப்பதும், வெளிப்படைத்தன்மையுடன் சரியான நேரத்தில் அறிக்கை தயார் செய்வதும் முக்கியமான நடவடிக்கையாகும்" என்று அவர் கூறினார்.
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் திட்ட மேலாளருமான திரு விகாஸ் ஷீல், கடந்த 2 அக்டோபர் 2022 அன்று தொடங்கப்பட்ட ஸ்வச் ஜல் சே சுரக்ஷா பிரச்சாரத் திட்டத்தைப் பற்றி பேசினார். மேலும் அனைத்து மூலங்களிலிருந்தும் பெறப்படும் தண்ணீர் மாதிரிகள் ஆய்வகத்தில் சோதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
களப்பரிசோதனை கருவிகள் மூலமாகவும், மாசுபாடுகள் பதிவாகும் இடங்களிலும் சீர்செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
'தண்ணீர் சேவையை உறுதி செய்வதே' இந்த பணியின் முக்கிய குறிக்கோள் ஆகும் என்றும் இதனால் குழாயில் இருந்து நேரடியாகக் குடிக்கலாம்" என்பது யதார்த்தமாகிறது என்றும் அவர் கூறினார்.
நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மைக்கேல் க்ரீமர் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பேசும் பொது,
உயிரியல் மாசு இல்லாத தண்ணீரை வழங்க முடிந்தால், ஆண்டுக்கு 1.4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இறப்பதைத் தவிர்க்கலாம் என்றார்.
இந்த மாநாட்டில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் அதிகாரிகள் மற்றும் கிராமப்புற நீர் மேலாண்மை அமைப்பை சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பிரதமரின் தாயாரின் மறைவுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பிறகு மாநாடு தொடங்கியது.
கருத்துகள்