சமூக ஊடகங்களில் விளம்பரம் மற்றும் கட்டண விளம்பரம் வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்டணம் விளம்பரம் வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திரு ரோஹித் குமார் சிங், இந்த வழிகாட்டு நெறிமுறைகளை புதுதில்லியில் இன்று வெளியிட்டார்.
பாரம்பரியமான அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் தவிர டிஜிட்டல் ஊடகங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரங்கள் முறைப்படுத்தப்படவில்லை. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வரும் விளம்பரங்களும் முறையற்ற வணிக நடைமுறைகளும் நுகர்வோரை பாதிப்பதற்கு வழி வகுத்துள்ளது.
இந்நிலையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முறையற்ற வணிக நடைமுறைகள் மற்றும் தவறான வணிக நடைமுறைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொருள்கள் அல்லது சேவைகள் தொடர்பாக ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கும் பிரபலங்கள் அது குறித்த உண்மைத்தன்மையை உறுதிப் படுத்திக் கொண்டு வெளியிட வேண்டும் என்று இந்த வழிகாட்டுதல்களில் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டணம் பெற்று விளம்பரம் செய்தால் அந்த விளம்பரத்தில் கட்டணம் பெற்ற விளம்பரம் என தெரியப்படுத்த வேண்டும் என்றும் அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்