நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல்
தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ரூ. 3000 கோடி வழங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரினங்களை நோயிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தின் 2-வது கட்டத்தை செயல்படுத்த ரூ.33.78 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தேசிய உவர் நீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் மரபணு மேம்பாட்டுத் திட்டத்தை இன்று (27.02.2023) தொடங்கிவைத்துப் பேசிய அவர், மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும், அறிவியல் பூர்வமான உள்ளீடுகள் கிடைப்பதற்கும், ரிப்போர்ட்ஃபிஷ்டிசீஸ் என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது. மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றிய தகவல்களை நேரடியாக மாவட்ட மீன்வள அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும், விஞ்ஞானிகளிடமிருந்து தொழில்நுட்ப உதவியை பெற்று பிரச்சனைக்கு தீர்வு காணவும் இந்த செயலி உதவும் என்று அவர் கூறினார்.
காப்பீட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இறால்களுக்கான காப்பீட்டு திட்டத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் உவர் நீர் மீன் வளர்ப்புக்கான மத்திய நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது. புயல், வெள்ளம் மற்றும் நோய் பரவல் ஆகியவற்றால், இறால்கள் வளர்க்கும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க இந்தத் திட்டம் உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் உள்நாட்டு வெள்ளை இறாலில் புதிய வகையை உருவாக்க நமது விஞ்ஞானிகள் கடுமையாக பாடுபடுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் திரு பர்ஷோத்தம் ரூபாலா கூறினார். மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும், மீன் சார்ந்த தொழில்முனைவோருக்கும் உதவி செய்யும் இத்தகைய முக்கியமான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க தமது அமைச்சகம் எப்போதும் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு 2014-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசு, சுமார் 3000 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக தெரிவித்தார். ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு 625 கப்பல்கள் வாங்க நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும், இதேபோல் கடலில் மீன்பிடிக்க செல்லும் கப்பல்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கு 5000 மீனவர்களுக்கு சுமார் 18 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை திருவொற்றியூர், கடலூர் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றத்தில் இருந்து மீன்வளத்துறை மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டு இறால் ஏற்றுமதி வெறும் ரூ. 8175 கோடியாக இருந்ததாகவும், இது கடந்த ஆண்டு ரூ.42,706 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மீன் வளர்ப்பு துறையில் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதன் காரணமாக, இறால் ஏற்றுமதி பெரும் வளர்ச்சியை கண்டிருப்பதாகவும், ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். இத்துறைக்கு கடந்த 9 ஆண்டுகளில் 32,500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் முருகன் கூறினார்.
முன்னதாக இந்திய வெள்ளை இறால் இனப்பெருக்கம் மற்றும் மேம்பாட்டு அமைவகத்திற்கு இரு அமைச்சர்களும் அடிக்கல் நாட்டினர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மீன் வளத்துறை செயலர் ஜதேந்திர நாத் ஸ்வைன், மத்திய மீன் வளத்துறை இணைச் செயலர் கே பாலாஜி, தமிழ்நாடு மீன் வளத்துறை முதன்மை செயலர் ஏ கார்த்திக், சிபா இயக்குனர் திரு குல்தீப் லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்