உரிமையியல் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையிலிருந்தாலும், மோசடி செய்து போலியாகப் பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்யலாம்
உரிமையியல் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையிலிருந்தாலும், மோசடி செய்து போலியாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளரிடம் புகாரளிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 2000 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட ஒன்பது பத்திரங்கள் போலியானவை என அறிவித்து, அவற்றை ரத்து செய்யக் கோரி நடேசன் எனும் நபர் மாவட்டப் பதிவாளர் நிர்வாகத்திடம் புகாரளித்த அடிப்படையில் உண்மையான ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி ஹரிநாத் என்பவருக்கு, மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை இரத்து செய்யக் கோரி ஹரிநாத் எனும் நபர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, மோசடி மற்றும் போலி ஆவணங்களென ரத்து செய்யக் கோரி நடேசன் தாக்கல் செய்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த புகாரை விசாரணைக்கு ஏற்கக் கூடாதென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் ஆவணங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதாகவும், அந்த அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும் படி மாவட்டப் பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியதில் எந்த சட்டவிரோதமில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும், மோசடி ஆவணங்கள் குறித்து மாவட்டப் பதிவாளரிடம் புகார் அளிக்கும் உரிமையை பறிக்க முடியாது எனத் தெளிவுபடுத்திய நிலையில் இந்த வழக்கில் மாவட்டப் பதிவாளரின் நோட்டீசுக்கு இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இருதரப்பினரின் கருத்துக்களைக் கேட்டு 12 வாரங்களில் புகார் மனு மீது சட்டப்படி முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
கருத்துகள்