திறன் இந்தியா திட்டம் திறமையான இளைஞர்களை உருவாக்கி உலகிற்கே வழங்கி வருகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
திறன் இந்தியா திட்டம் திறமையான இளைஞர்களை உருவாக்கி உலகிற்கே வழங்கி வருகிறது என மத்திய தகவல் ஒலிபரப்பு & மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை டாக்டர் எல். முருகன் கூறியுள்ளார்.
சென்னை அருகே மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மாபெரும் தொழில்முனைவோர் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய
அமைச்சர் முருகன், 2047 ஆம் ஆண்டில் 100 வது சுதந்திரத்தின் போது நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நோக்கி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு தற்போது செயலாற்றி வருகிறது என்று தெரிவித்தார்.
அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பதை நோக்கி நாம் செயலாற்றி வருகிறோம் என்றும், 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, டிஜிட்டல் இந்தியா இயக்கம் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய உதவி வருகிறது என்றும் தெரிவித்த அவர், இதன் மூலம் அரசின் பணம் ரூ. 2 லட்சம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் திறன்வாய்ந்த தொழிலாளர்களை இந்தியா உருவாக்கி வருகிறது எனவும், ஐரோப்பா, அமெரிக்க உள்பட பல வெளிநாடுகளில் இந்தியர்கள் தலைமை இடத்தில் உள்ளனர். இது போன்ற திறமையானவர்களை உருவாக்கவே திறன் இந்தியா திட்டம் செயல்படுத்தபடுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் முருகன் குறிப்பிட்டார்.
நமது மாணவர்கள் தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட தொழில்கல்வியை பயில வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனா பெருந்தொற்றின்போது தற்சார்பு இந்தியா இயக்கத்தை முன்னெடுத்து வெளிநாடுகளிடம் தடுப்பூசிக்காக இந்தியா கையேந்தும் என்ற கணிப்பை தவிடுபொடியாக்கி உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை தயாரித்து 200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை செலுத்தியதோடு, மற்ற நாடுகளுக்கும் விநியோகம் செய்து வருகிறோம் என்றார். இது நமது தொழில்துறையின் வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக உள்ளது என்றார் அவர்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியா பொருளாதாரத்தில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று அவர் கூறினார்.
அமிர்த காலத்தின்போது ஜி20க்கு தலைமை ஏற்றுள்ளோம். உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஜி20 கூட்டத்தை சென்னையில் நாம் நடத்தி உள்ளோம். சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ராணுவ தொழில் வழித்தடத்தை பிரதமர் அறிவித்துள்ளார். முத்ரா திட்டப் பயனாளிகள், ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் 80000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட் தொழிநுட்பப் பணிகள், சென்னை, பெங்களூருரில் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
கருத்துகள்