மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உணர்வுகளை உள்ளடக்கிய பூங்கா- உலகின் மிகப்பெரிய, தனித்துவமிக்க, மாற்றுத்திறனாளிகள் பூங்காவிற்கு திரு நிதின்கட்கரி அடிக்கல் நாட்டினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உணர்வுகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய, தனித்துவமிக்க மாற்றுத்திறனாளிகள் பூங்காவிற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின்கட்கரி அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான சமூகத்தை உள்ளடக்கியதாக கட்டமைக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த பூங்கா அமைக்கப்படுவதாகத் தெரிவித்தார். இரக்கத்திற்கு மாற்றாக அனுதாபத்தை இந்தப் பூங்கா அளிக்கும் என்றும் இதனால் இப்பூங்காவிற்கு உணர்வுகளை உள்ளடக்கிய பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தப் பூங்கா மூலம் உணர்வுகளை உள்ளடக்கிய செய்தி நாடு முழுவதும் மட்டும் அடையாமல் உலகம் முழுவதும் சென்றடையும் என்று தெரிவித்தார்.
அனைத்து 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் உகந்த வசதிகள் இந்தப் பூங்காவில் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார். தொடு உணர்தல் தோட்டம், நீர்சிகிச்சைப் பிரிவு, மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் , தாய்களுக்குத் தனி அறை ஆகிய வசதிகள் இப்பூங்காவில் அமைக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
நாட்டில் விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் ஒன்றாக நாக்பூர் நகரம் திகழ்வதாக திரு. கட்கரி கூறினார். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக கடந்த 2016- ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார். இச்சட்டம் மாற்றுத் திறனாளிகள் கண்ணியத்துடன் வாழ வழிவகுப்பதாகக் குறிப்பிட்டார். இந்த முன்னெடுப்பின் கீழ், தென்னிந்தியாவிலும் மத்தியபிரதேசத்திலும் சில மாற்றுத் திறனாளிகள் பூங்காக்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாகக் கூறினார். அந்த வரிசையில் நாக்பூரின் பார்தி வளாகத்தில் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காக உணர்வை உள்ளடக்கிய பூங்கா அமைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலம் 12 கோடி ரூபாய் செலவில் 90 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உலகின் முதலாவது உணர்வை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகள் பூங்கா கட்டப்படுவதாக திரு. நிதின் கட்கரி கூறினார்.
கருத்துகள்