சென்னையிலிருந்து காரைக்குடிக்கு பேரூந்தில் பயணம் செய்த நகைக்கடை உரிமையாளரை காரில் கடத்தி 1.5 கிலோ தங்கம், ரூபாய் .2.5 கோடி பணம் கொள்ளை: காவலர் உடை அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளைக் கும்பல் கைவரிசை
காரைக்குடியில் துப்பாக்கி முனையில் காரில் கடத்தி 1.5 கிலோ தங்க நகைகள், ரூபாய்.2.5 கோடி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, நகர் முத்துப்பட்டணத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 50). நகைக்கடை உரிமையாளரான இவரிடம் காரைக்குடி பகுதியிலுள்ள நகைக்கடைக்காரர்கள், பழைய நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக வழங்குவார்களாம் . அதை அவர் சென்னைக்கு எடுத்துச் சென்று, மற்ற வியாபாரிகளிடம் விற்பனை செய்து அதை பணமாக மாற்றிக் கொண்டு வந்து உரியவர்களிடம் வழங்குவாராம். அதோடு, அவர்கள் கூறும் புதிய மாடல் நகைகளையும் வாங்கி வருவாராம். எப்போதும் பேரூந்திலேயே சென்னை சென்று விற்றும், வாங்கியும் வருபவர்
இரண்டு நாள் முன்பு இரவு காரைக்குடியிலுள்ள நகைக்கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக 1.5 கிலோ தங்க நகைகள், ரூபாய் .2.5 கோடி பணத்துடனும் சென்னையிலிருந்து தனியார் பேருந்தில் காரைக்குடிக்கு அதிகாலை ஐந்து மணியளவில் காரைக்குடி கழனி வாசல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, முகக்கவசம் அணிந்த நான்கு பேர், ரவிச்சந்திரனிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவர்கள் வந்த காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற பின், அவரிடமிருந்த 1.5 கிலோ தங்கம், ரூபாய்.2.5 கோடி பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவரது கை, கால்களை கட்டி காரின் பின்சீட்டில் படுக்க வைத்துள்ளனர். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம், லேனா விளக்குப் பகுதியில் ரவிச்சந்திரனை காரிலிருந்து கீழே இறக்கி விட்டு பின் கொள்ளை கும்பல் தப்பியதாம்.
அது குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து மோசடிக் கும்பலைத் தேடி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து நேற்று காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்ஸ்டாலின் தலைமையில் தனிப்படையினர், ரவிச்சந்திரனை அழைத்துக் கொண்டு லேனா விளக்குப் பகுதியில் விசாரணையிலீடுபட்டனர். அதையடுத்து டிஐஜி துரை, காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் காரைக்குடியில் முகாமிட்டுள்ளனர்.
ரவிச்சந்திரனைக் கடத்தியவர்கள் காவல்துறை உடையிலிருந்ததாகவும், கையில் வாக்கி டாக்கி மற்றும் துப்பாக்கி வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்காதது கொள்ளையர்களுக்கு சாதகமாக இருக்கலாம். அதன் தொடர் சம்பவமாக தற்போதும் கொள்ளை அரங்கேறி இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் பொது மக்கள் மத்தியில் இருகுறித்து அதிகம் பேசப்படுகிறது .
கருத்துகள்