ஆணும் பெண்ணும் சரிநிகர் என கொள்வோம்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்
ஆணும் பெண்ணும் சரிநிகர் என கொள்வோம் என்று தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பேசுகையில்,
ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள் என்றும், கரோனா காலகட்டங்களில் பெண்களின் சிறு சேமிப்பின் மூலம் தான் குடும்பத்தின் பொருளாதார நிலை மீண்டு வருவதற்கு ஏதுவாக இருந்தது என்றும் பேசினார். மேலும், சிறு மற்றும் குறு வியாபாரிகள் கூட இந்நாளில் இணைய வழி பண பரிவர்த்தனையை மேற்கொள்கிறார்கள் என்றும், இணைய வழி பண பரிவர்த்தனைக்கு ’ பீம் செயலி’ என்று பெயரை சூட்டி, நமது அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் அவர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்துகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள மாணவிகள் பல்வேறு விதமான ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், பெண்கள் எப்போதும் மனம் தளரக் கூடாது என்றும், எதற்காகவும் எப்பொழுதும் கலங்கி நிற்க கூடாது என்றும் அறிவுறுத்தினார்
இந்நிகழ்ச்சியில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் டாக்டர் அகிலா, பதிவாளர் திரு. தாமரைச்செல்வன், மகளிர் துறை தலைவர் திரு சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்