நூறு சதவிகிதம் ஹிந்தி மொழி அமலாக்கம் தொடர்பான சுற்றரிக்கையை திரும்பபெற மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கோரிக்கை,
அவர் தெரிவித்துள்ளதாவது , தென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன்.
அதில் "உடல் நலம் " பற்றிய ஒரு வழிகாட்டி நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.
ஆனால் அக்கூட்டத்தில் 100 சதவீதம் ஹிந்தி மொழி அமலாக்கம் தொடர்பான பயிற்சி தரப்பட்டதாக அந்த சுற்றறிக்கை கூறுகிறது.
" உடல் நலம்" போன்றே "தேச நலம்" கருத்தில் கொண்டு அங்கு அலுவல் மொழி விதிகளை அங்கு விவரித்து இருக்கலாம். அலுவல் மொழி அமலாக்க குழு அந்த விதிகளை வாசிக்க வேண்டும். "100 சதவீத இந்தி" என்று அலுவல் மொழி விதிகளே கூறவில்லை. ஆகவே தான் அது மாநிலங்களை நான்காக பிரித்துள்ளது. எங்கு இந்தி கட்டாயம், எங்கு தெரிவு, எங்கு கட்டாயமில்லை, எங்கு அலுவல் மொழிகளே பொருந்தாது என்று அது கூறுவதை தென்னக ரயில்வே அலுவல் மொழி ஆய்வுக் குழு அறிந்திருக்க வேண்டும். இதில் நானகாவது வகையில் தமிழ்நாடு வருகிறது. அலுவல் மொழி விதிகளில் இருந்து 100 சதவீதம் விதி விலக்கு தரப்பட்டுள்ளது. விதிகளில் உள்ள இந்த 100 சதவீதத்தை விட்டு உங்கள் மனதில் உள்ள ஆசைகளையெல்லாம் 100 சதவீதம் நிறைவேற்ற முயற்சிக்கக் கூடாது. மொழி பன்மைத்துவமே தேசத்தின் "உடல் நலத்திற்கு" உகந்தது.
தென்னக ரயில்வே தமிழில் செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது. "தேஜஸ்" என்று பெயர் சூட்டுவதை விட அழகான தமிழில் ஆயிரம் பெயர்கள் உள்ளன. தமிழ் மக்களுக்கான சேவைக்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது.
ஆகவே உடல் நலத்திற்கு எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக் கூடாது? என்று வழிகாட்டல் அக் கூட்டத்தில் தரப்பட்டுள்ளது போல அலுவல் மொழி விதிகள் "எதை செய்ய சொல்லி இருக்கிறது? எதை செய்யக் கூடாது?" என்பதையும் தென்னக ரயில்வே பயில்வது நல்லது.
தென்னக ரயில்வே பொது மேலாளர் உரிய முறையில் அலுவல் மொழி ஆய்வுக் குழுவை அறிவுறுத்த வேண்டும். அதன் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை உறுப்பினர் மூலம் ஓங்கி ஒலிக்கிறது,
கருத்துகள்