ஒருவார கால தேசிய கடல்சார் தின கொண்டாட்டங்கள் தொடக்கம்:
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு முதலாவது வணிக கடற்படை கொடியை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அணிவித்தார்
ஒருவார கால தேசிய கடல்சார் தின கொண்டாட்டங்கள் புதுதில்லியில் இன்று தொடங்கின. தேசிய கடல்சார் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் நீராவி கப்பலான எஸ்எஸ் லாயல்டி, 1919-ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி மும்பையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட நாளான ஏப்ரல் 5ம் தேதி தேசிய கடல்சார் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஒருவார கால கொண்டாட்டங்கள் இன்று (2023 மார்ச் 30) தொடங்கின. இதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உடையில் முதலாவது வணிக கடற்படை கொடியை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அணிவித்தார். மத்திய கப்பல் துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சில் பேசிய மத்திய கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், இந்திய கப்பல் துறையினர் உலகளாவிய விநியோக சங்கிலி செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிப்பதாக கூறினார். நமது கடற்சார் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்து ஆனால் அறியப்படாத நபர்களை கொண்டாடும் வகையில், தேசிய கடல்சார் வாரம் கொண்டாடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆதரவை அளித்து ஒருவார கால கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கும் விதமாக முதலாவது வணிக கடற்படை கொடியை அணிந்து கொண்டது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிப்பதாக அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.
இந்திய கப்பல் துறையினரின் சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக சாகர் சம்மான், வருணா விருது, சாகர் சம்மான் உயர்திறன் விருது ஆகியவற்றை மத்திய கப்பல் துறை அமைச்சகம் வழங்கி வருகிறது. தேசிய கடல்சார் தின கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கென மும்பையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்