சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது
விமான நிலையத்தின் வளர்ச்சி அம்சங்கள், பயணிகளின் வசதிகள் தொடர்பான இதர அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு டி.ஆர்.பாலு தலைமையில், விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
வான்வழி மேம்பாட்டிற்காக பாதுகாப்புத்துறை நிலத்தை இந்திய விமானநிலைய ஆணையத்துக்கு ஒப்படைப்பதற்கு, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநில அரசாங்கத்தின் கூட்டத்தை கூட்டுமாறு ஆலோசனைக்குழு தலைவர் அறிவுறுத்தினார். பரந்த அளவிலான விமானங்களை இயக்குவதற்கு அணுகுப் பாதையில் உள்ள தடைகளை அகற்ற உடனடி நடவடிக்கைகளைத் தொடங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் புதிய முனையம்/ சரக்கு முனையம் முதல் சென்னை பை-பாஸ் வரை இணைப்பு சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் 60 ஏக்கர் நிலம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் “காமராஜ் உள்நாட்டு முனையம்” மற்றும் “அண்ணா சர்வதேச முனையம்” என்று பெயர் பலகைகளை வைக்க திரு டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.
உள்ளூர் மொழி பேசும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பணியாளர்களை பயணிகள் தொடர்பு கொள்ளும் பகுதிகளில் பணியமர்த்துமாறு வலியுறுத்தினார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலைய இயக்குனர் டாக்டர் சரத் குமார் முக்கிய விசயங்களை விளக்கினார். கூட்டத்தில் மாநில அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு இ.கருணாநிதி (பல்லாவரம்); திரு எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு மீ.அ. வைத்தியலிங்கம் , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு ஏ.ஆர். ராகுல் நாத், சென்னை பெருநகர மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில காவல்துறையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்