ஜம்மு - காஷ்மீரில் சர்தார் வல்லபாய் படேல் முடிக்காத பணியைப் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பெருமிதம்
ஜம்மு - காஷ்மீரில் சர்தார் வல்லபாய் பட்டேலினால் முடிக்கப்படாத பணியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற "ஒரே பாரதம் உன்னத பாரதம்" என்ற விழாவில் தலைமையேற்றுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சுதந்திரத்திற்குப் பிறகு 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கியப் பங்காற்றியதாகவும், துரதிர்ஷ்டவசமாக, ஜம்மு - காஷ்மீரைக் கையாள பட்டேலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மட்டும் உரிய சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தால், இந்தியாவின் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும் என அவர் கூறினார். ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது, ஜம்மு - காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும், இந்த பிரச்சினை இவ்வளவு ஆண்டுகளாக நீடித்திருக்காது” என்றார்.
சட்டப்பிரிவு 370 மற்றும் 35A-வில் உள்ள முரண்பாடு, 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நிலையில், பிரதமர் மோடி வந்து அதனை சீர் திருத்த வேண்டுமென நாடு காத்திருந்ததாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளைப் பற்றிப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், 2014-ம் ஆண்டுக்கு முன் வடகிழக்குப் பகுதிகள் என்கவுண்டர்கள், போராட்டங்கள், சாலை மறியல்கள், மோசமான ரயில் விபத்துகள் மற்றும் வன்முறைகளுக்காக மட்டுமே செய்திகளில் இடம் பிடித்ததாகக் கூறினார். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில், பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களுக்கு 60 முறை வருகை தந்துள்ளதாகவும், இதற்கு முன் உள்ள அனைத்து பிரதமர்களின் மொத்த பயணங்களின் எண்ணிக்கையை விடவும் இது அதிகம் என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களில் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியையும் உறுதி செய்ததன் மூலம் மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளார் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். இப்போது வடகிழக்கு மாநிலங்களின் இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதாகவும், மிசோரம் மாநிலத்தில் இந்தியாவின் முதல் "சிட்ரஸ் உணவுப் பூங்கா" இஸ்ரேலின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த புதிய அரசியல் கலாசாரமும், வளர்ச்சி வேகமும் இணைந்து, மன மற்றும் உடல் ரீதியான தடைகளைத் தகர்த்து, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்று நாட்டை ஒன்றிணைத்துள்ளது என்று கூறி டாக்டர் ஜிதேந்திர சிங் தனது உரையை முடித்தார்.
கருத்துகள்