இத்தாலி நாட்டின் துணைப் பிரதமர் திரு அன்டோனியோ தஜானியுடன் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் சந்திப்பு
மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இத்தாலி நாட்டின் துணைப் பிரதமரும், வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறை அமைச்சருமான மேதகு திரு அன்டோனியோ தஜானியை நேற்று (12.04.2023) சந்தித்து, இரு தரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்துப் பேசினார். இத்தாலி நாட்டில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் திரு கோயல் நேற்று ரோம் சென்றடைந்தார்.
பல்வேறு துறைகளில் வளர்ச்சியை அதிகரிக்க இந்தியா - இத்தாலி இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டுமுயற்சியை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் இருவரும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இத்தாலி பிரதமர் திருமிகு ஜியோர்ஜியா மெலோனியின் சமீபத்திய இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளின் உறவு, கேந்திர கூட்டுமுயற்சி நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு தலைவர்கள் இருவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். விண்வெளி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, வேளாண்மை போன்ற துறைகளில் மேற்கொள்ளப்படும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஆய்வு செய்ய கூட்டு பணிக்குழுவை அமைப்பது பற்றி திரு தஜானி யோசனை தெரிவித்தார்.
இந்தியா - இத்தாலி இடையேயான இருதரப்பு உறவு அதிக வளர்ச்சி அடைந்து, கடந்த 2022-ஆம் ஆண்டில் 16 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவானதற்கு அமைச்சர்கள் இருவரும் திருப்தி தெரிவித்ததோடு, இதனை மேலும் அதிகரிக்க உறுதி பூண்டனர். இந்தியா தலைமையிலான ஜி20 அமைப்பின் முன்னுரிமைகளை திரு தஜானிக்கு விளக்கிய திரு கோயல், வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் தலைமைத்துவத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக இத்தாலி நாட்டின் துணைப் பிரதமர் உறுதி அளித்தார்.
கருத்துகள்