கடந்த மூன்று ஆண்டுகளில் ஜெம் மூலம் கொள்முதல் வளர்ச்சி 10 மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்
ஜெம் எனப்படும் அரசின் இ-சந்தை மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் கொள்முதல் வளர்ச்சி 10 மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகம், தொழில், உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நேற்று ஜெம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த க்ரேடா-விக்ரேடா கௌரவ் சம்மான் சமரோவா 2023 விழாவில் உரையாற்றிய அவர், இ-சந்தையில் அனைத்து பங்குதாரர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார். நாடு முழுவதும் பொது கொள்முதலில் வெளிப்படையான மாற்றத்தை உருவாக்கியிருப்பதாகக் கூறிய அவர், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கொள்முதல் நடைமுறையின் தனித்துவம் வாய்ந்த வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை ஜெம் நனவாக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். கடந்த 7 ஆண்டுகளில் அரசு இ-சந்தையின் பலன்கள் மற்றும் அதன் பன்முகத்தன்மையிலான வளர்ச்சிக் குறித்தும் விளக்கினார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் துறைகள், மக்கள் நலன் திட்டங்களுக்கான சரக்கு கொள்முதலுக்கு ஜெம்-மை அதிகளவில் பயன்படுத்தியதன் வாயிலாக வரி செலுத்துவோரின் பணம் சேமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 2022-23 நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த சரக்கு கொள்முதல் மூன்று லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்று நம்பிக்கைத் தெரிவித்த அமைச்சர், ஏற்கனவே, 2022-23-ம் நிதியாண்டின் இரண்டு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதையும் நினைவுக் கூர்ந்தார்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் அரசு
இ-சந்தைக்கான புதிய நடைமுறை உருவாக்கப் பட்டிருப்பதாகவும், இது வணிகர்களும், விற்பனையாளர்களும் கொள்முதல் சார்ந்த முடிவுகளை எடுக்க உதவிகரமாக இருப்பதாகவும் கூறினார். இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் ஜெம் போர்டலை பராமரிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான சரக்குகள் மற்றும் சேவைகளை இணையதளம் மூலம் கொள்முதல் செய்வதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சார்பில் அரசு இ-சந்தையான ஜெம்-மை கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்