இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை, தங்கம் உள்ளிட்டஆபரணங்களில் ஹால்மார்க் தரமுத்திரை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அந்தமானில்இன்று நடத்தியது.
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப் பொருள்களுக்கான தரமுத்திரை உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம் இன்று அந்தமானில் 2 முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியது.
26.06.2023 காலையில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களில் ஹால்மார்க் தரமுத்திரை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மாலையில், தரப்படுத்துதல் மற்றும் தரம் குறித்த யூனியன் பிரதேச அளவிலான குழுக்கூட்டமும் நடைபெற்றன.
தரமுத்திரை குறித்த நகைக் கடை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நகை வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் நகை வியாபாரிகள் கலந்து கொண்டனர். பிஐஎஸ் தென்மண்டல துணைத் தலைமை இயக்குநர் திரு யுஎஸ்பி யாதவ் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், தரமுத்திரைத் திட்டம், நடைமுறைகள், விதிகள், நகைக் கடைகளின் பொறுப்பு, இணையதளப் பதிவு, மானக் இணையம் பற்றிய அறிமுகம், செயல் விளக்கம் ஆகியவை இடம் பெற்றன. தென்மண்டல தர முத்திரை இணை இயக்குநர் திரு டி திருமல ராவ் விளக்கம் அளித்தார்.
தரப்படுத்துதல் மற்றும் தரம் குறித்த யூனியன் பிரதேச அளவிலான குழுக்கூட்டத்திற்கு அந்தமான் நிகோபார் தலைமைச் செயலர் திரு கேசவ் சந்திரா தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் புதிய தர நியமங்களை உருவாக்குவதற்கான பகுதிகளை அடையாளம் காணுதல், தரநியமங்களுடன் இணக்கமான முறையில் செயல்படும் அமைப்புகளை அடையாளம் காணுதல், மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இவை தவிர தர நிர்ணயம் குறித்த மாநில அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்துதல், தர நிலைகளை உருவாக்குவதல், தர நியமங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், இணக்க மதிப்பீடு மற்றும் நுகர்வோர் மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்