எத்தனால் திட்டங்களுக்கு கடன் வழங்கும் கால அளவை செப்டம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டிப்பு
எத்தனால் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவி நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் புதிய சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்கவும், பயன்பாட்டில் உள்ள ஆலைகளை விரிவுபடுத்தவும் சர்க்கரை ஆலைகளுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்கப்படுவதை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மேலும் இந்த ஆலைகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டிக் கழிவை அரசு ஏற்றுக்கொள்கிறது.
கடன்கள் வழங்கும் கால அளவை செப்டம்பர் 30, 2023 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக எத்தனால் சம்பந்தமான திட்டங்களுக்கு கடன் வழங்குவதற்கான கால அளவு இந்த ஆண்டு மார்ச் 31 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் பலதரப்பட்ட சவால்களினால் உரிய காலத்திற்குள் கடன்களை வழங்க இயலவில்லை. எனவே தற்போது இந்த கால அளவு நீட்டிக்கப்படுகிறது. இந்த முடிவால் வேளாண் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுவதோடு, புதை படிம எரிபொருள் மீதான சார்பும், கச்சா எண்ணெய் இறக்குமதியும், காற்று மாசும் குறையும்.
பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டத்திற்காக எத்தனால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. அரசின் கொள்கை மாற்றங்களினால் 2023-ஆம் ஆண்டில் தேசிய எத்தனால் உற்பத்தி திறன் 1244 கோடி லிட்டரை எட்டியது. ஜூன் 11, 2023 வரை 310 கோடி லிட்டர் எத்தனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்