இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 642டன்எடைகொண்ட எல்விஎம்-3 வகை ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 642டன்எடைகொண்ட எல்விஎம்-3 வகை ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி தொடங்கியது
சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான மைல்கல்லாக அமைந்த சந்திரயான் பயணத்தின் மூன்றாவது விண்கலம் சந்திரயான் -3, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தின் இரண்டாவது செலுத்து தளத்தில் இருந்து இன்று 14 ஜூலை 2023 பிற்பகல் 02:35 மணி 17 நொடிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான் -3 விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, 3 நிலைகளில் படிப்படியாக அதன் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்படும்.
இந்தமுறை சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் வாகனம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம் மூலமாக கீழ் இறக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் சில வேதிப்பொருட்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சந்திரயான் -3 புவி சுற்று வட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு ஆகஸ்ட் 1ம் தேதி செல்லும் என்று இஸ்ரோவின் தலைவர் திரு சோம்நாத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 05:47 மணிக்கு, சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என்று தெரிவித்தார். இந்த திட்டத்தின் இயக்குநர் மோகன் குமார் ராக்கெட் இயக்க இயக்குநர் பிஜூ தாமஸ் விண்கல இயக்குநர் டாக்டர் பி வீரமுத்துவேல் ஆகியோர் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
விண்ணில் செலுத்தப்பட்ட எல்விஎம் 3 வகை ராக்கெட் 16 நிமிடங்களுக்கு பிறகு அதன் எரிபொருள் கலம் விடுவிக்கப்படும் என்றும், நீள்வட்டப்பாதையில் இந்த ராக்கெட் பூமியை சுமார் 5 அல்லது 6 முறை சுற்றி வரும் என்றும் ஒவ்வொரு சுற்றின் போதும் ராக்கெட்டின் உயரம் அதிகரித்து 36,500 கிலோ மீட்டர் வரையிலான உயரத்திற்கு செல்கையில், அது சந்திரனின் சுற்றுவட்டப்பாதைக்கு அருகில் இந்த ராக்கெட் சென்று விடும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரனிலிருந்து 100 கிலோ மீட்டர் உயரம் வரை அருகில் சென்ற பிறகு லாண்டர் நிலவில் தரையிறங்கும் முயற்சிகளை மேற்கொள்ளும். நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் திட்டமிட்டப்படி நடைபெறும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி மாலை 5.47 மணியளவில் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்றும், அதன்பிறகு அதிலிருந்து ரோவர் வாகனம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் என்று அவர் குறிப்பிட்டார்.
சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் சந்திரயான் 4 திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறினார். இந்த ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை நேரில் காண மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வந்திருந்தார். ராக்கெட் ஏவப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வானம் நமது எல்லை இல்லை, விண்ணையும் தாண்டிச் செல்வோம் என்றும் நமது அடுத்த தலைமுறை நிலவையும் தாண்டிச் சென்று ஆராயும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி, சுட்டிக்காட்டினார்.சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்
சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து குடியரசுத் துணைத் தலைவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: "சந்திரயான்-3 விண்கலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்த சாதனை, விண்வெளி ஆராய்ச்சியில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் மைல்கல்லாக அமைந்த இந்த நிகழ்வு ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்துகிறது!"
கருத்துகள்