தேர்தல் ஆணையர் டாக்டர் அனுப் சந்திர பாண்டே அதிபர் தேர்தலை பார்வையிட உஸ்பெகிஸ்தான் சென்றார்
உஸ்பெகிஸ்தானின் மத்திய தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில், இந்திய தேர்தல் ஆணையர் டாக்டர் அனுப் சந்திர பாண்டே, நாளை நடைபெறவுள்ள அந்நாட்டு அதிபர் தேர்தலுக்கான பார்வையாளராக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளார். அவர் மூன்று பேர் கொண்ட குழுவுக்கு தலைமை தாங்கி செல்கிறார்
உஸ்பெகிஸ்தானில் இந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற வாக்கெடுப்புக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. சர்வதேச சமூகத்தால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபர் உள்பட நான்கு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, டாக்டர் அனுப் சந்திர பாண்டே ,உஸ்பெகிஸ்தானின் தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் ஒத்துழைப்பு குறித்து ஒரு கூட்டத்தை நடத்தினர். இந்தியாவில் சமீபத்தில் நடந்த தேர்தல்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான தேர்தல் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு வழிகள் குறித்து டாக்டர் பாண்டே பேசினார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது உள்ளிட்ட இருநாட்டு தேர்தல் ஒத்துழைப்பு குறித்து அவர் விளக்கினார்.
உஸ்பெகிஸ்தான் சட்டங்களின்படி, அதிபர் ஏழு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். மத்திய தேர்தல் ஆணையம், 14 மாவட்ட தேர்தல் கமிஷன்கள் மற்றும் 10,760 உள்ளூர் தேர்தல் கமிஷன்கள் அடங்கிய மூன்று அடுக்கு கட்டமைப்பை தேர்தல் நிர்வாகம் பின்பற்றுகிறது. உஸ்பெகிஸ்தானில் சுமார் 20 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்சமாக 3000 வாக்காளர்கள் இடம் பெறுவார்கள். 22 மில்லியனுக்கும் அதிகமான தகுதியுள்ள வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும் உஸ்பெகிஸ்தான் குடிமக்களுக்காக நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளும், வெளிநாடுகளில் 55 வாக்குச் சாவடிகளும் திறக்கப்பட்டுள்ளதால், இந்தப் பயிற்சி அந்நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாக மாற உள்ளது.
தேர்தல் ஆணையர் டாக்டர் அனுப் சந்திர பாண்டே தலைமையில், துணைத் தேர்தல் ஆணையர்கள் திரு. ஹிர்தேஷ் குமார் மற்றும் திரு. ஆர்.கே. குப்தா ஆகியோர் அடங்கிய இந்தியக் குழு அங்கு சென்றுள்ளது.
டாக்டர். பாண்டே, தாஷ்கண்டில் உள்ள குடியுரிமை பெறாத இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இந்தியத் தேர்தல்கள் தொடர்பாக கலந்துரையாட உள்ளார்.
கருத்துகள்