சந்திரயான் -3, குறைந்த செலவில் விண்வெளித் திட்டங்களை மேற்கொள்ளும் இந்தியாவின் திறனை நிரூபித்துள்ளது: மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்
சந்திரயான் -3, குறைந்த செலவில் விண்வெளித் திட்டங்களை மேற்கொள்ளும் இந்தியாவின் திறனை நிரூபித்துள்ளது என்று மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்தூரில் அறிவுஜீவிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய அவர் தோல்வியடைந்த ரஷ்யாவின் நிலவு திட்டத்திற்கு ரூ.16,000 கோடி செலவானது என்றார். ஆனால் நமது சந்திரயான் -3 திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடி மட்டுமே செலவானது என்று அவர் குறிப்பிட்டார். நிலா மற்றும் விண்வெளிப் பயணங்களை அடிப்படையாகக் கொண்ட ஹாலிவுட் திரைப்படங்களை எடுப்பதற்கேகூட ரூ. 600 கோடிக்கு மேல் செலவானது என்பதைக் கவனிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் தனியார் துறையை ஈடுபடுத்துவதற்காக, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட "அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை" மசோதாவின்படி ஐந்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் கூறினார். இது முழுமையாக செயல்படுத்தப்படும்போது, அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். ஒரு தனித்துவமான பொது மற்றும் தனியார் கூட்டு செயல்பாட்டைத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ரூ. 36,000 கோடி நிதி தனியார் துறையிலிருந்தும், ரூ. 14,000 கோடியை அரசும் முதலீடு செய்யும் என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் கூட வியக்கும் அளவுக்கு ஒரு தனித்துவமான முயற்சியை இந்தியா தொடங்கியதாக அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிறுவனங்கள் தங்கள் சிஎஸ்ஆர் (பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு) நிதி ஒதுக்கீட்டில் 10 சதவீதத்தை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்குவதற்கு ஒரு விதிமுறை வகுக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். விண்வெளித்துறையில் அரசு தனியார் பங்களிப்பு இருக்கும்போது அதிக சாதனைகளை நிகழ்த்த முடியும் என்று அவர் கூறினார்.
2014 ஆம் ஆண்டில் 350 புத்தொழில் நிறுவனங்கள் இருந்த நிலையில், இப்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். முத்ரா திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை எளிதாக கடன் வழங்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். புதுமைகளைத் தூண்டுவதற்கான முழு சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
கருத்துகள்