திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அசைவ உணவகம் அமைந்திருப்பதை, ஏற்க முடியாது.
கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதை சரிசெய்து தர முயல்கிறேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து ,இரண்டு நாள்கள் பயணத் திட்டத்துடன் திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் வந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை அண்ணாமலையார் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தவர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அடுத்தடுத்து கலந்து கொண்டார். இடையே, சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘‘திருவண்ணாமலை, சிவபெருமானின் பூமி. சிவபெருமான் விருப்பமில்லாமல், இங்கு எதுவும் நடக்காது. சாதுக்களுக்கு ஒரு பொறுப்பிருக்கிறது. அது, மக்கள் அனைவரையும் ஆன்மிக ஆற்றல் உடையவர்களாக உருவாக்குவது தான் சாதுக்களாகிய உங்கள் பணி கோவிலிலோ, ஆசிரமத்திலோ முடிந்து விடக் கூடாது. சமுதாயத்தில் பரந்து விரிய வேண்டும். பக்தர்களே, சிவன் உருவமாக கிரிவலம் வருகின்றனர். அந்த கிரிவலப்பாதையில், அசைவ உணவகம் இருப்பதை, ஏற்க முடியாது. கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதைச் சரிசெய்து தர முயல்கிறேன்’’ என்றும் தெரிவித்திருந்தார்.
கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் வைக்க ஏற்கெனவே அனுமதி கிடையாதா அல்லது அது குறித்து ஏதேனும் சட்ட வரையறைகள் உள்ளாதா என ஹிந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர் பாபுவைக் கேட்ட நிலையில், அறநிலையத்துறையின் பதிலிது
‘அறநிலையத்துறை பெண் அலுவலர் மூலம் விதிமுறைகள் அடங்கிய சட்டத்திருத்த நகலை வழங்கி விளக்கம் கொடுத்தார். ‘‘குத்தகை விதிகளின்படி, அண்ணாமலையார் திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டடத்திலோ, மனையிலோ இந்து சமய உணர்வுகளுக்கு மாறான, மறுக்கத்தக்க வர்த்தகம் அல்லது வியாபாரம் போன்ற செயல்பாடுகளுக்கு திருக்கோயில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை.குறிப்பாக, கோவிலுக்குச் சொந்தமான கடைகள், கட்டடங்களில் மதுக்கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகளை நடத்த வாடகைக்கோ, குத்தகைக்கோ விடக் கூடாது என்பது சட்டவிதிகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதேசமயம், கிரிவலப்பாதையிலுள்ள தனியார் கட்டடங்களில் செயல்படும் கடைகளில் இறைச்சி விற்பனை செய்தால், அதை எந்த வகையிலும் தடுக்க கோவில் நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. தனியார் கட்டடத்தில் அப்படி இயங்கும் அசைவ உணவகங்களை அகற்றச் சொல்லவோ, அப்புறப்படுத்தச் சொல்லவோ, விதிமுறைகள் திருத்தப்படவுமில்லை, வகுக்கப்படவுமில்லை. எனவே, ‘கிரிவலப்பாதையில் அசைவ உணவகம் இருக்கவே கூடாது’ என்பது ஆளுநரின் தனிப்பட்ட கருத்தாகவே இங்கு பார்க்க முடிகிறது’’ எனத் தெரிவித்தார்.
கருத்துகள்