விழுப்புரம் மாவட்ட த்தில் நடந்த நிலப்பதிவு மோசடிக்கு வழக்கு பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தருமபுரி டி.சி.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் : 'விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிராமத்திலுள்ள நிலத்தை நவீன் பாலாஜி, மாணிக்கவேல் ஆகியோரிடமிருந்து நாங்கள் வாங்கி வானூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய விண்ணப்பித்தோம்.
ஆனால், பாண்டிச்ச்சேரி டி.ராமராஜ், கடலூர் சி.கே.எஸ்.கார்த்திகேயன், சென்னை கோடம்பாக்கம் வேலு, தடப்பெரும்பாக்கம் பொன்.ராஜா, நாமக்கல் எம்.சேகர் உள்ளிட்ட பலர் இந்த நிலத்துக்கு கடன் கொடுத்துள்ளதாகவும், எனவே இந்த நிலத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுக்க முடியாதென்றும் பத்திரப்பதிவு அலுவலர்கள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க ரூபாய். பல லட்சத்தை இலஞ்சமாகத் தர வேண்டுமெனக் கோருகின்றனர். எனவே எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க வானூர் சார் பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' ,எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக முன் முறை விசாரணைக்கு வந்த போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.இரமன்லால் ஆஜராகி, தெரிவித்ததில் 'வழக்குத் தொடர்ந்துள்ள மனுதாரர் டி.சி.இளங்கோவன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் நெருங்கிய உறவினராவார். இவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க அரசியல் செல்வாக்கு மிக்க சி.கே.எஸ்.கார்த்திகேயன் என்பவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்த நிலத்துக்கான அசல் பத்திரங்கள் மாயமாகி விட்டது எனக்கூறி புதுச்சேரி காலாபட்டு காவல்நிலையத்தில் புகார் செய்து கண்டுபிடிக்க முடியவில்லை எனச் சான்றிதழ் பெற்றுள்ளனர்,' எனத் தெரிவித்திருந்தார். நீதிபதி, இந்த மோசடி நில விற்பனையில் ரூபாய். பல கோடி கைமாறியுள்ளதால் இந்த வழக்கில் வருமான வரித்துறை, மத்திய அமலாக்கத்துறை, காலாபட்டு காவல் துறை ஆய்வாளர் மற்றும் பத்திரப்பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் கார்த்திகேயன், ராமராஜ் உள்ளி்ட்ட அனைவரையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவி்ட்டிருந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.சந்திரசேகரன், பிரேம் ஆனந்த் ஆகியோர் ஆஜராகி,வாதிட்டபோது 'இந்த நிலத்தின் பத்திரங்களை கார்த்திகேயன் உள்ளிட்டோர் எடுத்துச்சென்று விட்டதாக மீண்டும் காலாபட்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதென்றார்.
அதையடுத்து நீதிபதி, இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே மனுதாரர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காலாபட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் அடிப்படையில் அந்த நிலத்துக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்துள்ளதாகக் கூறப்படும் நபர்கள் மீது மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
அதேபோல, வருமான வரித்துறை அதிகாரிகளும் இதற்கான ரிஷிமூலத்தைக் கண்டறியும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், எனக்கூறி விசாரணையை அக்டோபர் மதம் .16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கருத்துகள்