மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன:
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்று: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருமான திரு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை சாஸ்திரி பவனில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், மத்திய மக்கள் தொடர்பகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மக்கள் தொடர்பக அலுவலர்களுக்கான இரண்டு நாள் மண்டலப் பயிலரங்கை இன்று (06.09.2023) தொடங்கிவைத்து அவர் உரையாற்றினார். ஊடகங்கள் இன்று பலவிதமாக வளர்ச்சி அடைந்துள்ளன. இவற்றில் செய்திகளும் வெகு வேகமாகப் பரவி வருகின்றன. மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்றுள்ள ஊடகங்கள் மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இதனை மக்கள் தொடர்பக அலுவலர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொதுவாக, அனைத்து மக்களுக்குமான திட்டங்கள், குறிப்பாக பெண்கள், மாறிய பாலினத்தினர் மற்றும் முதியோர்களுக்கான திட்டங்கள் உள்ளன. இவற்றை உரியவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமாகும். மாணவர்கள், விவசாயிகள், சமூகத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரையும் இதற்கான பணிகளில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று திரு ராதாகிருஷ்ணன் கூறினார்.
கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் அதனை மட்டுப்படுத்த உதவியது, வல்லுநர்கள் மற்றும் அரசுகளின் முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தன என்றாலும், மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் மிக முக்கிய காரணமாக இருந்தது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் பெரும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. எனவே, மாறி வரும் சூழலுக்கேற்ப அனைத்து வகையான ஊடகங்களையும் நல்ல, மக்களுக்குப் பயன்தரும் தகவல்களை கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும் என்று திரு ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இந்தப் பயிலரங்கில் தலைமையுரையாற்றிய பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மக்கள் தொடர்பகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் திரு வி பழனிச்சாமி பேசுகையில், மக்களிடையே நடத்தை மாற்ற தகவல் தொடர்பு மிகவும் இன்றியமையாதது என்றார். புதிய நடைமுறைகளை ஏற்பதில் தயக்கம் காட்டுவோரின் சதவீதம் 16-ஆக மட்டுமே உள்ளது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. எஞ்சிய 84 சதவீத மக்கள் உடனடியாகவோ அல்லது படிப்படியாகவோ ஏற்றுக்கொள்ளும் மனநிலையை பெற்றிருக்கிறார்கள் என்பதால் இவர்களை பயன்படுத்தி வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது மக்கள் தொடர்பக அலுவலர்களின் பணியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
9-ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்களுக்கு ரூ.75,000 முதல் ரூ. 1,25,000 வரை படிப்பு உதவித்தொகை கிடைக்கின்ற பிரதமரின் யசாஸ்வி திட்டம் பற்றி குறிப்பிட்ட திரு பழனிச்சாமி, இது போன்ற எளிய மக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்றார்.
இந்தப் பயிலரங்கின் நோக்கத்தை எடுத்துரைத்து உரையாற்றிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலக, மத்திய மக்கள் தொடர்பகக் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, தென் மண்டலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த ஆண்டு 70 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகக் கூறினார். புகைப்பட கண்காட்சிகள், இசை, பாடல், நிகழ்வுகள், கருத்தரங்குகள் போன்ற பல வடிவங்களில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களிடம் மக்கள் நலத்திட்டங்களின் பயன்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் திட்டங்கள் தவிர, இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டு என்பதாலும், சத்துணவு சம்பந்தப்பட்டது என்பதாலும், சிறுதானியங்களின் பயன் குறித்து மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது என்று அவர் கூறினார். இதேபோல், லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற இயக்கத்தையும் மக்கள் தொடர்பகம் முன்னெடுத்துச் செல்கிறது என்று திரு அண்ணாதுரை குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை இயக்கம் காரணமாக கிராமப்பகுதிகளில் கூட திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். தொடக்க நிகழ்வின் நிறைவாக, மத்திய மக்கள் தொடர்பகத்தின் பணிகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
இந்த இரண்டு நாள் பயிலரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட தென் மண்டலத்தில் உள்ள மக்கள் தொடர்பக அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
கருத்துகள்