தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், கோகோ கோலா நிறுவனத்துடன் இணைந்து சில்லறை விற்பனையாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது
சில்லறை விற்பனையாளர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் இந்த முன்முயற்சி முக்கியப் பங்கு வகிக்கும்: மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்
ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் சில்லறை விற்பனையாளர்களின் திறன்களை வலுப்படுத்த, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (எம்.எஸ்.டி.இ) கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.டி.சி) கோகோ கோலா இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளது. இதற்காக திறன் இந்தியா இயக்கத்தின் “சூப்பர் பவர் சில்லறை விற்பனையாளர் திட்டம்” இன்று (15-10-2023) அறிமுகம் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்த கூட்டுச் செயல்பாட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கோகோ கோலா இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் திரு வேத் மணி திவாரி, மற்றும் திரு சங்கேத் ரே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், துர்கா பூஜை கொண்டாட்டத்தின் தொடக்கத்துடன், இந்த சில்லறை விற்பனையாளர்கள் தொடர்பான திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இது சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிகாரமளித்து அவர்களின் வணிகங்களை விரிவுபடுத்துவதுடன் நுகர்வோர் அனுபவங்களையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார். சில்லறை விற்பனையாளர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகளாக நமது பணியாளர்களை மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த வகையில் இந்த முன்முயற்சி அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார். நாட்டின் 1.40 கோடி சில்லறை விற்பனையாளர்களுக்கு திறன் இந்தியா டிஜிட்டல் தளத்தின் மூலம் 14 மணிநேர சில்லறை விற்பனைப் பயிற்சி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். வணிக உத்திகளை எவ்வாறு திட்டமிடுவது மற்றும் செயல்படுத்துவது என்பது குறித்து சில்லறை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த பயிற்சி தொகுப்புகள் பல மொழிகளில் கிடைக்கும் என்றும், இது நாடு முழுவதும் உள்ள சிறு கடைக்காரர்கள் மற்றும் பெரிய வணிகர்களுக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சூப்பர் பவர் சில்லறை விற்பனையாளர் திட்டம், சில்லறை விற்பனையாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் என அவர் கூறினார். இது தொழிலாளர்களை ஆதரிக்கும் திறன் இந்தியா இயக்கத்தின் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று அவர் தெரிவித்தார். இது சிறு மற்றும் குறு சில்லறை விற்பனையாளர்களுக்கு பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். நுகர்வோரின் விருப்பங்களை நன்கு புரிந்துகொள்வதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு இது வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
சில்லறை விற்பனையாளர்களின் தொழில்முறை தேவைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர் மேலாண்மை, சரக்கு மற்றும் பங்கு மேலாண்மை, நிதி மேலாண்மை போன்ற தொழில் சார்ந்த திறன்களை இந்த திட்டம் வழங்கும் என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.
கருத்துகள்