சிவில் விவகாரங்களில் காவல்துறையினர் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை
சொத்து உள்ளிட்ட நிலத் தகராறு மற்றும் சிவில் விவகாரங்களில் காவல்துறை சார்ந்த நபர்கள் தவறாகத் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்
நிலம், பணம் கொடுக்கல் வாங்கல் , மற்றும் சொத்துத் தகராறு உள்ளிட சிவில் பிரச்சினைகளை கிரிமினல் பிரச்சனை ஆக்கி காவல் துறையில் பணி செய்யும் ஊழியர்கள் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட காவல்துறைப் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பணம், நிலம், சொத்து, பாதை, அறிவுசார் சொத்துத் தகராறு உள்ளிட்ட சிவில் விவகாரங்கள் தொடர்புடைய மனுக்கள் மீது சில காவல் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது. எனவே, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் விவகாரங்கள் தவிர, சிவில் விவகாரங்களில் காவல் துறையினர் தேவையில்லாமல் தலையிடக் கூடாது.
மேலும் எப்.ஐ.ஆர். எனும் முதல் தகவல் அறிக்கை சி.எஸ்.ஆர். எனும் மனு ரசிது அல்லது உயர் அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் இல்லாமல் எந்தவொரு மனுக்கள் மீதும் காவல் துறையின் பணியாளர்கள் எந்த விசாரணையும் நடத்துவதாக இருக்கக் கூடாது. சிவில் விவகாரங்களில் விசாரணை அல்லது தலையிடுவதை காவல் துறை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள் காரணமாக, சிவில் விவகாரங்களில் விசாரணை நடத்துவது அல்லது தலையிடுவது முற்றிலும் அவசியம் என்று காவல் துறை அலுவலரான அதிகாரி கருதினால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நகரங்களில் உள்ள காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும் காவல்துறைக் கண்காணிப்பாளர், காவல் ஆணையரின் தனிப்பட்ட ஒப்புதல் இல்லாமல், எந்தவொரு காவல் துறை அலுவலர், அதிகாரியும் சிவில் விவகாரங்கள் மீதான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சுற்றறிக்கையை அனைத்துப் பிரிவு காவல் துறையினரும் பின்பற்ற வேண்டும்.
என தமிழ்நாடு காவல்துறையின் கூடுதல் டிஜிபி அருண் IPS தெரிவித்துள்ளார்.
கருத்துகள்