போட்டித் தேர்வுப் பயிற்சித் துறையில் தவறான விளம்பரங்களைத் தடுப்பது மற்றும் ஒழுங்குபடுத்துதல் குழுவின் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
போட்டித்தேர்வுப் பயிற்சித் துறையில் தவறான விளம்பரங்களைத் தடுப்பது தொடர்பான வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சி.சி.பி.ஏ) சார்பில் நேற்று (08.01.2024) புதுதில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவரும் நுகர்வோர் நலத் துறையின் செயலாளருமான திரு ரோஹித் குமார் சிங் மற்றும் பிற உறுப்பினர்களும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கல்வித்துறை, தேசிய சட்டப்பல்கலைக் கழகம், லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த வரைவு வழிகாட்டுதல்கள் அனைத்து நேரடி மற்றும் இணையதளப் பயிற்சி நிறுவனங்களுக்கும் இணையதளத்திலோ அல்லது நேரடியாகவோ பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்தும் இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.-
தேர்வு பெற்ற நபரின் புகைப்படத்துடன் தேவையான தகவல்களைப் பயிற்சி நிறுவனம் குறிப்பிட வேண்டும்.
வெற்றிபெற்ற நபர் பெற்றுள்ள இடம்
வெற்றிபெற்ற விண்ணப்பதாரரால் தேர்வு செய்யப்பட்ட பாடம்
பயிற்சித் திட்டத்தின் கால அளவு
கட்டணப் பயிற்சி அல்லது இலவசம் குறித்த தகவல்கள்
போன்றவை விளம்பரத்தில் இடம் பெறவேண்டும்.
மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் படி பயிற்சித் துறையால் தவறான விளம்பரங்களுக்கான அபராதம் விதிக்கப்படும். விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் தற்போதைய விதிகளின் கீழ் தொடர்ந்து நிர்வகிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டிய அவசரத் தேவை இருப்பதாகவும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட வரைவு அம்சங்கள் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்றும் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பயிற்சி நிறுவனங்களின் தவறான விளம்பரத்திற்கு எதிராக சி.சி.பி.ஏ ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது. தவறான விளம்பரத்திற்காக 31 பயிற்சி நிறுவனங்களுக்கு சி.சி.பி.ஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவற்றில் 9 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்