தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம், புதுச்சேரி காவல்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுச்சேரி காவல் துறை மற்றும் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (Rashtriya Raksha University- RRU) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும் இணைப்பு உடன்படிக்கை திங்கட்கிழமை அன்று புதுச்சேரியில் கையெழுத்தானது. இத்துடன் மிஷன் கர்மயோகி திட்டம் புதுவையில் வெற்றிகரமாகத் துவங்கப்பட்டது. கல்வித் திட்டங்களை அங்கீகரிப்பதற்கும், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் தேசிய பாதுகாப்புத் துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் இந்தக் கூட்டணி வழிவகுக்கும்.
நிகழ்ச்சியில் மூத்த காவல் கண்காணிப்பாளர் (குற்றம் மற்றும் புலனாய்வு) சுவாதி சிங் ஐபிஎஸ் வரவேற்புரை வழங்கினார்.
காவல்துறை பணியாளர்கள் மற்றும் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் ஒப்பந்தத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கவுரை ஆற்றினர்.
காவல்துறை தலைமை இயக்குநர் பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பு துணைவேந்தர் பேராசிரியர் (முனைவர்) கல்பேஷ்.எச்.வான்திரா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் வலுப்படுத்துவதற்கான வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் பொதுவான இலக்கை நோக்கிச் செயல்படவும் உதவுகிறது.
உடன்படிக்கை குறித்து பேசுகையில் திரு. வான்திரா அவர்கள், இம்முயற்சி ஒரு தொடக்கம் மட்டுமே என்றும் மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்துடன் கூடிய கல்வியை அளிக்க உதவும் என்றும் கூறினார்.
“RRU-உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைகோர்த்த 90 நிறுவனங்களில் புதுச்சேரிமுதல் யூனியன் பிரதேசம் ஆகும், புதுச்சேரி போலீஸ் இந்த கூட்டணியை நீண்ட நாட்களுக்கு எதிர்பார்க்கிறது” என்று தலைமை இயக்குநர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நவீன உலகின் ஆற்றல்மிக்க சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களை ஊக்குவிக்கும் மிஷன் கர்மயோகி திட்டத்தை அறிமுகப்படுத்தினர். தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சி, காவலர்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் துணை புரியும்.
மக்கள் மத்தியில் காவல் துறையின் மதிப்பை வலுப்படுத்தவும் காவலர்களின் திறன் மேம்பாட்டிற்கும் மிஷன் கர்மயோகி உதவும். இதன் மூலம் திறமையும் பொறுப்புணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட போலீஸ் சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (முனைவர்) ஷிஷிர் குமார் குப்தா, டிஐஜி பிரிஜேந்திர குமார் யாதவ், போலீஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்