தமிழ் நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் கலப்பு உறுதி செய்யப்பட்டதால் விற்பனைக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரொடமைன் பி (Rhodamine-B) எனப்படும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 வது பிரிவின் படி, தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவென உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 வது பிரிவின்படி, ரொடமைன் பி எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவு பொருட்கள் தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை சார்பில் மெரினா கடற்கரையில் பிபரவரி மாதம் 8-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதை உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வுகளின் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
அது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தெரிவித்த போது: ரோடமைன் பி நச்சுப்பொருள் ஜவுளி உற்பத்தித் துறையில் சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறைந்த செலவில் மக்கள் மனம் கவரும் வண்ணத்தை கொடுப்பதால் பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை உணவுகளிலுள்ள வண்ணங்கள் நமது உடலிலிருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற குறைந்தது 45 நாட்களாகும்.
இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். இவை உடல் செல்களில் உள்ள மரபணுக்களையும் சிதைக்கும் திறன் உடையவை. அதனால் இவற்றைப் பயன்படுத்தக் கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.இனிப்பதோ விஷம். பெண்களுக்கான நிறம் என்று பிங்க் கலரைச் சொல்வார்கள்.. குழந்தைகளை கவரக்கூடிய பிளாஸ்டிக், ரப்பர் பொம்மைகள் என்றாலும் பிங்க் நிறத்தில் தான் விற்பனையாகின்றன. கார்டூன்களில் கூட, பிங்க் நிற ஆடைகளே உபயோகிக்கப்படுகிறது. மனதுக்குப் பிடித்தமான நிறமாக, மகிழ்ச்சியூட்டும் நிறமாக இந்தப் பஞ்சு மிட்டாய் கலர், அழுத்தமாக பதிவு செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது.
திருவிழாக்களென்றாலும், திருமண வீடுகளென்றாலும் சரி, பூங்காக்கள், நடைபாதைகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பஞ்சுமிட்டாய்கள் விற்பணைக்கு வந்துவிடுகின்றன. எல்லா வகையான நிறங்களுக்குமே உள்ள மகத்துவம் இந்த பஞ்சு மிட்டாய்க்கும் உள்ளதால் தான், "பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற திரைப்பாடல் வரையும் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண முடிந்திருக்கிறது.அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த பஞ்சுமிட்டாய் விஷம் என்ற தகவல் வந்துள்ளதும், தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதும், நம்முடைய நலனைக் கருதி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது..
கருத்துகள்