கன்னித் தீவு கதை போல வளரும் கச்சத்தீவு மீட்பு வரலாறு, அரசியல் நிலை ! கச்சத்தீவு கைமாறியது எப்படி ?
கச்சத்தீவு தமிழநாட்டு மீனவர்களின் நம்பிக்கை,அப் பகுதியில் கிடைக்கும் மீன்களை நம்பியே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள். ஆனால் அந்தக் கச்சத்தீவின் மீது இலங்கைக்கு ஆர்வமதிகம். ஆர்வமென்றால் தனது மீனவர்களைக் கச்சத்தீவுக்கு அனுப்பி மீன்பிடிக்க வைப்பதல்ல; கச்சத்தீவையே வாங்கிக்கொள்ளவேண்டுமென்பது இலங்கையின் விருப்பம்.
1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் பிரதமர் ஸ்ரிமாவோ
பண்டாரநாயகாவின் அழைப்பை ஏற்று இலங்கைக்குச் சென்றார் அப்போதய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி. 1964 ஆம் ஆண்டு சிறிமாவோ லால் பகதூர் சாஸ்திரி ஒப்பந்தத்தில் விட்டுப்போன நாடற்ற ஒன்றரை லட்சம் பேரின் குடியுரிமை விவகாரம், பாக் ஜலசந்தியின் கடல் எல்லையை வகுப்பது, கச்சத்தீவு ஆகிய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். 1971 ஆம் ஆண்டு வங்கதேச யுத்தத்துக்குப் பின் அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேண விரும்பிய பிரதமர் இந்திரா காந்தி, அதைச் சாத்தியப்படுத்த கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்க முடிவு செய்ததைத் தொடர்ந்து 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்ரிமாவோ பண்டாரநாயக இந்தியா வந்து பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.
விஷயம் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதியின் கவனத்துக்கும் வந்தது. கடிதம் மூலமாகக் கருத்துக்கள் கேட்டார் பிரதமர் இந்திரா காந்தி. உடனடியாக அமைச்சர்
செ. மாதவன் சகிதம் டெல்லி புறப்பட்ட மு.கருணாநிதி, கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்களுடன் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்தார். இராமநாதபுரம் மன்னர் பிற்காலச் சேதுபதி, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையைக் குத்தகைக்கு விட்டிருப்பது பற்றிய ஜமீன் மற்றும் சமஸ்தான நிர்வாகப் பதிவேடுகளைப் பிரதமரிடம் காட்டிய முதலமைச்சர் மு.கருணாநிதி, தமிழநாடு மீனவர்களின் ஆதாரசக்தியான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை
வார்க்கப்படக்கூடாது; அதன்மூலம் தமிழ்நாட்டில் மீனவர்களின் வாழ்க்கையில் மண் விழுந்துவிடக்கூடாது என்பதை விளக்கினார். சந்திப்போடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழ்நாட்டிற்குத் திரும்பியதும் கச்சத்தீவு தொடர்பான தமிழ்நாடு அரசின் கருத்தை விளக்கி 6 ஜனவரி 1974 ஆம் தேதி நீண்டதொரு கடிதமெழுதினார்.
கச்சத்தீவு பிரச்னை குறித்து வெளிநாட்டு இலாகா உறவுச் செயலாளர் கேவல்சிங் என்னுடன் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, எனது இலாகா அதிகாரிகள் கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள். கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14-2-1766-ஆம் தேதியில் ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடமிருந்த கடற்கரைப் பகுதிகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17-3-1762-ஆம் தேதியில் ஜான் சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சுட்டிக் காட்டவில்லை. 1954-ஆம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.
நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்துக் குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் இராமநாதபுரம் இராஜா உள்பட தென்இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன.
கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குபகுதிக் கரையோரத்திலும் சங்கெடுக்கும் உரிமை இராமநாதபுரம் இராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு வரியோ,கப்பமோ கட்டியதில்லை.
இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதை எந்த அகில உலக நீதிமன்றத்திலும் எடுத்துக்கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னை சட்டக்கல்லூரியின் ஆராய்ச்சிப்பிரிவு கருத்து தெரிவித்திருக்கிறது. எனவே, இலங்கைப் பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி, 'கச்சத் தீவு இலங்கைக்குச் சொந்தமல்ல' என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.
இதுதான் தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதத்தின் சாராம்சம். கடிதத்தை பிரதமர் இந்திரா காந்தி வாங்கி பார்த்தார் அதோடு வைத்துக் கொண்டாரே தவிர அதிலிருக்கும் அம்சங்கள் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அடுத்தடுத்த காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினார் பிரதமர் இந்திரா காந்தி. நிலைமை கைமீறிப்போய்க் கொண்டிருக்கிறதென்பதை உணர்ந்த முதலமைச்சர் மு.கருணாநிதி, அந்த ஒப்பந்தத்தில் இரண்டு ஷரத்துகளைச் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ்நாடு மக்களை கச்சத்தீவுக்குள் அனுமதிப்பது தொடர்பாக ஒன்றும், தமிழ்நாடு மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக இன்னொன்றும் சேக்கப்படவேண்டுமென்று வலியுறுத்தினார் முதல்வர் மு.கருணாநிதி.
அதனைத் தொடர்ந்து கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கும் ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டன. ஒவ்வொரு ஷரத்தும் நுணுக்கமாகத் தயார் செய்யப்பட்டது. 28 ஜூன் 1974 ஆம் தேதியன்று இந்தியா இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பாக பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கை சார்பாக இலங்கை பிரதமர் ஸ்ரிமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்துப் போட்டனர். அந்த ஒப்பந்தத்தில் இருந்த வாசகங்கள் முக்கியமானவை.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை மற்றும் அவை தொடர்பான சிக்கல்களை நியாயமாகவும் சமமாகவும் தீர்த்துக்கொள்ளவே இந்த ஒப்பந்தம் என்று தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கிடையே சிக்கலைத் தீர்க்கும் எண்ணத்துடன் சிக்கல் முழுவதையும் அனைத்துக் கோணங்களில் இருந்தும் வரலாற்று ஆதாரங்களுடனும் சட்டமுறைகளையும் நோக்கிய பிறகு, இந்திய அரசும் இலங்கை அரசும் இந்த ஒப்பந்தத்துக்கு வந்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்குத் தாரை வார்க்கப்படும் கச்சத்தீவின் அமைப்பு, அதன் எல்லைகள், அவற்றுக்கான உரிமைகள் அனைத்துக்குமான ஷரத்துக்கள் இலங்கைக்குச் சாதகமாகவே உருவாக்கப்பட்டன. அதேசமயம் இந்திய மீனவர்களை திருப்தி செய்யும் வகையில் சில ஷரத்துகள்
சேர்க்கப்பட்டன. அவற்றில் முக்கிய ஷரத்துகளை மட்டும் இங்கே காணலாம்.
ஷரத்து 4 ல் உள்ளது
இந்தியா இலங்கை இடையே உறுதிசெய்யப்பட்ட எல்லைக் கோட்டில், அந்தந்த நாடுகளின் பக்கம் உள்ள நீர்ப்பரப்பு, தீவுகளின் பரப்பு, கடலின் அடிப்பரப்பு ஆகியவற்றை அந்தந்த நாடுகள் தங்களுடைய
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு உரிமை உடையவை. தவிரவும், அவற்றின் மீது தத்தமது இறையாண்மையைச் செலுத்தவும் அந்த நாடுகளுக்கு உரிமை உண்டு.
ஷரத்து 5 ல் கண்டுள்ளது
இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும்
(அந்தோணியார் கோவில் திருவிழா) இதுநாள்வரை கச்சத்தீவுக்கு வந்து சென்றதைப் போலவே இனியும் வந்து செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. கச்சத்தீவை அனுபவிக்க சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. கச்சத்தீவுக்குள் நுழைவதற்கும் புழங்குவதற்கும் இலங்கை அரசிடமிருந்து எந்தவிதமான பயண ஆவணங்களோ அதாவது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), நுழைவு அனுமதிகளோ குடிபெயர்ந்து (வீசா) பெற வேண்டிய அவசியமெதுவும் இல்லை. இதற்காக இலங்கை அரசு எந்தவிதமான நிபந்தனையையும் தமிழ்நாடு மீனவர்களுக்குக் கொடுக்க முடியாது.
ஷரத்து 6 ல் கண்டுள்ளது
இந்தியா இலங்கைப் படகுகளும் கப்பல்களும் கச்சத்தீவுக்குச் சென்றுவர என்றும் உள்ள மரபுவழி உரிமைகளும் தொடர்ந்து நீடிக்கும்.
ஷரத்து 7 ல் கண்டுள்ளது
கச்சத்தீவுக் கடற்பகுதிக்குள் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு வகையான உலோகங்களும் கண்டுபிடிக்கப்பட்டால், கடல் பூமிக்குள் மணல், கனிமம். போன்றவைகளும் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை எடுப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்திய அரசும் இலங்கை அரசும் தங்களுக்குள் கலந்துபேசி, ஆலோசனை செய்து, இருதரப்புக்கும் இடையே முறையான உடன்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டும். அதன்பிறகே அந்த வளங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை இரு நாடுகளுக்கும் கிடைக்கும்.
ஒப்பந்தத்தில் இடம்பெற்ற ஷரத்துகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்திய மீனவர்களுக்குச் சாதகமாக இருப்பது போலத் தோற்றமளித்தபோதும் அவை பெரும்பாலும் இலங்கை
மீனவர்களுக்குச் சாதகமாக இருப்பதாகவே தமிழ்நாட்டு மீனவர்களும்
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளும் கருத்துத் தெரிவித்தனர். இந்த ஒப்பந்தம் இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது.
கச்சத்தீவு ஒப்பந்தம் புனிதமற்ற ஒப்பந்தமென்று நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார் திமுகவின் இரா. செழியன். தாய்நாட்டுப் பற்றற்ற நாகரிமற்ற அரசின் செயல் என்றார் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்த நாஞ்சில் கி.மனோகரன். அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.கருணாநிதி.
ஸ்தாபன காங்கிரஸின் பொன்னப்ப நாடார், இந்திரா காங்கிரஸின் ஏ.ஆர். மாரிமுத்து, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் மணலி கந்தசாமி, தமிழரசுக் கழகத்தின் ம.பொ. சிவஞானம், அதிமுகவின் செ. அரங்கநாயகம், முஸ்லிம் லீக்கின் திருப்பூர் மொய்தீன், தமிழரசு கழகத்தின் ஈ.எஸ்.தியாகராஜன், ஃபார்வர்ட் ப்ளாக் ஏ.ஆர்.பெருமாள். சுதந்தரா கட்சியின் வெங்கடசாமி, உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்துகொண்டனர்.
தீர்மானம் தயாரானது.
'இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்து, தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறது.'
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் தீர்மானத்தில்
கையெழுத்திட்டனர். ஒருவர் மட்டும் எதிர்ப்புக்குரல் எழுப்பினார். போதாக்குறைக்கு, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தார். அவர், அதிமுகவின் செ.அரங்கநாயகம். ஏன் ? அவர் விரும்பியது வேறொரு தீர்மானம். ஆம். கச்சத்தீவு விவகாரத்தில் தமிழ்நாடு ஆளும் திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பது தான் அதிமுக விரும்பிய தீர்மானம். அது உடனடியாக கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. செ.அரங்க நாயகம் வெளிநடப்புச் செய்து விட்டார்.
ஆனாலும் அதிமுக கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்த்தே நின்றது. கச்சத்தீவுக்காகக் கச்சை வரிந்து கட்டுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக, அதற்காகப் போராட்டம் நடத்தவும் தயாரானது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் நிறுத்திக்கொள்ள முதல்வர் மு.கருணாநிதி விரும்பவில்லை. திமுக பொதுக்குழுவிலும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து தனது அதிருப்தியை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து வெளிப்படுத்த விரும்பினார் முதல்வர் மு.கருணாநிதி. 1974 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அந்தத் தீர்மானம் நிறைவேறியது. 'இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ் நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத் தீவுப் பிரச்னையில் மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ளுவதோடு மத்திய அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.
எத்தனை கண்டனங்கள். எத்தனை எதிர்ப்புகள். எத்தனைத் தீர்மானங்கள். ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராக வீணானது. இந்தியாவுக்குச் சொத்தான கச்சத்தீவு, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக இலங்கை அரசுக்குத் தாரைவார்க்கப்பட்டது. - என்பதே உண்மை. கி.பி.1605-ஆம் ஆண்டில் மதுரை ஆண்ட நாயக்க மன்னர்களால் இராமநாதபுரம் பிற்காலச் சேதுபதிகளின் அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. இராமநாதபுரம் சேதுபதி அரசர் நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு , நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் இராமநாதபுரம் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622 ஆம் ஆண்டு முதல் 1635 வரை) ஆட்சிக் காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் பிரிட்டிஷ் கிழக்கிந்திய காலனி ஆதிக்க ஆட்சிக்கு உட்பட்ட பிறகு, 1803-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795-இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் ஆங்கிலக் கிழக்கிந்திய கும்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 ஆம் ஆண்டு முதல் 1812 ஆம் ஆண்டு வரை நிர்வாகம் செய்தார்.
கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை இங்கிலாந்து விக்டோரியா மகாராணி தனது பிரகடனத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936 முதல் 1940-ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார் .1972- ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதாவது கெஜட்டியர், அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட இராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ஆம் ஆண்டில் ஏ.ஜெ. ஸ்டூவர்ட் எழுதிய சென்னை இராசதானியிலுள்ள திருநெல்வேலி ஜில்லா அல்லது மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், இராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், இராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு இராமேஸ்வரம் கர்ணத்தின் அதாவது தற்போது கிராம நிர்வாக அலுவலர் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் தாலுகா அல்லது வட்டத்திலுள்ள தீவென்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.1974 ஆம் ஆண்டு மற்றும் 1976-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி பிரதமர் இந்திராகாந்தி இந்திய அரசுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் ஒப்பந்த் தேதியிலிருந்து 10 வருடங்களுக்கு இந்திய மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்தவும் தீவுக்குச் சென்று வருவதற்கும் அனுமதியிருக்கிறது. ஆயினும் பத்து வருடங்களுக்குப் பின் இந்த அனுமதியில்லாத அல்லது புதுப்பிக்கும் முயற்சி இல்லாத நிலையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள். 1960-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 ஆம் ஆண்டு மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது என்று கூறி 2008-ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். பிறகு தமிழ்நாடு சட்டசபையில் ஜூன் 9, 2011 ஆம் தேதியன்று நடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தீர்மானத்தில் தமிழ்நாடு வருவாய் துறையையும் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாக் ஜலசந்தி என்பது இலங்கையின் வடக்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியே பாக் ஜலசந்தி யாகும். 1755 ஆம் ஆண்டிலிருந்து 1763 ஆம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தின் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆளுநரான ராபர்ட் பாக்கின் பெயர்தான் இந்த ஜலசந்திக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. பாக் நீரிணைப்புப் பகுதியை ஒரு கடல் என்றே சொல்ல முடியாது. பவளப் பாறைகள், மணல் திட்டுகள் அதிகமிருப்பதால் இந்தப் பகுதியில் பெரிய கப்பல்கள் கடந்து செல்ல முடியாது. ஆகவே சேது சமுத்திர திட்டம் காலதாமதம் பின்னர் நிறுத்தப்பட்டது. இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தொலைவிலும் பாக் ஜலசந்திப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகச் சிறிய தீவுதான் கச்சத்தீவு. கச்சத்தீவு 285 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவில் இராமநாதபுரம் ஜில்லா இராமேஸ்வரம் பகுதி பழைய பைபாஸ் சர்வே நம்பர் 1250. ஆகும் இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்கள் தான். மனிதர்கள் வசிக்காத இந்தத் தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்த சர்ச்சில் ஒரு வாரத்திற்கு வழிபாடு நடப்பது வழக்கம். 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் சிங்களவர் தமிழர் இடையே இனப் பிரச்னை ஏற்பட்ட பிறகு இந்த வழிபாடு தொடர்ச்சியாக நடப்பது தடைபட்டது. 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் படையாச்சி என்ற மதம் மாறிய கிருஸ்தவர் இந்த தேவாலயத்தைக் கட்டியதாகவும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் இங்கு கோவில் பிள்ளை பூஜை வைப்பார் என்றும் அரசு கெஸட்டியர் சொல்கிறது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பிரிட்டிஷார் இந்தத் தீவை, வெடிகுண்டுகளை வெடித்துப் பயிற்சி செய்யப் பயன்படுத்தினார்கள்.இராமநாதபுரம் சேதுபதி ராஜாவின் ஜமீன்தாரி உரிமைகளை வைத்தே 1974 ஆம் ஆண்டு வரை கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எல்லா ஆவணங்களும் அப்போதே புதுதில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. அவை தற்போது இரகசிய அதாவது மந்தணம் ஆவணங்களாகப் பராமரிக்கப்படுகின்றன. 1902 ஆம் ஆண்டில் இந்தத் தீவை அவருக்கு இந்திய அரசு வழங்கியது. அவருடைய ஜமீனுக்காக அவர் வழங்க வேண்டிய போஷ்குஷ் மற்றும் ஜெனத் (குத்தகைத் தொகை) இந்தத் தீவையும் உள்ளிட்டே கணக்கிடப்பட்டது. இந்தத் தீவைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமை, தீவில் மேய்ச்சல் உரிமை, வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் உரிமை ஆகியவற்றை இராமநாதபுரம் ராஜா குத்தகைக்கு விட்டிருந்தார். இதற்கு முன்பாகவே 1880 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முகமது அப்துல்காதர் மரைக்காயர் என்பவரும் முத்துச்சாமிப் பிள்ளை என்பவரும் இராமநாதபுரம மாவட்டத் துணை ஆட்சியர் எட்வர்ட் டர்னர் பெயரில் ஒரு குத்தகைப் பத்திரத்தைப் பதிவுசெய்தார்கள் . சாயம் தயாரிப்பதற்காக 70 கிராமங்களிலும் 11 தீவுகளிலும் வேர்களைச் சேகரிக்க இந்த குத்தகை உரிமை வழங்கியது. அந்த 11 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்று. 1885 ஆம் ஆண்டில் இதே மாதிரியான இன்னொரு குத்தகைப் பத்திரம் கையெழுத்தானது. 1913 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் சேதுபதி ராஜாவுக்கும் இந்தியவுக்கான வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் குத்தகைப் பட்டியலிலும் கச்சத்தீவின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதாவது, இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளையும் ஆட்சி செய்த ஆங்கிலக் கிழக்கிந்திய பிரிட்டிஷ் அரசு கச்சத்தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்ததே தவிர, இலங்கையின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி மெட்ராஸ் எஸ்டேட் (அபாலிஷன் அண்ட் கன்வர்ஷன் அன்டு இரயத்வாரி) சட்டத்தின் கீழ் சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட போது கச்சத்தீவு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது.
1972 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் பதிப்பிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட கெஸட்டியர், கச்சத்தீவை ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது. கச்சத்தீவின் சர்வே எண் 1250. இருந்தபோதும், கச்சத்தீவு ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்ற வகையிலேயே அந்த விவகாரத்தை அணுகியது இன்னும் அனுகுகிறது இலங்கை அரசு. இதில் பொதுவான நீதி யாதெனில் தேர்தல் வரும் காலங்களில் மட்டுமே இது பற்றி விவாதிக்க விரும்பும் அரசியல் கட்சிகள் தேர்தல் முடிந்தால் வாய் திறப்பதில் லை என்பது தான் உண்மை. ஆகவே கன்னித்தீவு கதை போல கச்சத்தீவு பிரச்சினைகள் நீண்டுள்ளது
கருத்துகள்