கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரத் தயார் என இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இராணி தகவல்
மத்திய, மாநில அரசுகள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தால் கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தயாரென்று இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இராணி இராஜராஜேஸ்வரி நாச்சியார் தெரிவித்தார். கச்சத்தீவு
ராமேசுவரம் அருகே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவானது, நாடு சுதந்திரத்துக்கு முன்பு ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.
இந்த நிலையில், இந்திய அரசால் 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டது. இராமேசுவரம் மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதியாக கச்சத்தீவு இருந்தது. கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டாலும் அங்கு இந்திய மீனவர்கள் சென்று மீன்பிடிக்கவும், வலைகளை உலர்த்திக் கொள்ளவும் அனுமதித்து விதிகள் வகுக்கப்பட்டு இருந்தன. ஆனால் காலப்போக்கில் இலங்கை அரசு அந்த அனுமதியை ரத்து செய்துவிட்டது. இதனால் தமிழக மீனவாகளின் மீன்பிடி உரிமை, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கச்சத்தீவை மீட்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது கச்சத்தீவை மீட்கும் விவகாரம் விவாதப்பொருளாகி அரசியல் களத்தில் சூடு பிடிக்க தொடங்கி உள்ள நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வாரிசுகள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கச்சத்தீவை திரும்ப பெற முயன்றால் அதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்புத் தருமென்று தெரிவித்தார். அதுகுறித்து இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் சேதுபதி இராணி இராஜராஜேஸ்வரி நாச்சியார் தெரிவித்ததாவது
கச்சத்தீவு சேதுபதி மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகத்தான் இருந்தது. நாடு சுதந்திரத்திற்கு பின்பு கச்சத்தீவு, இந்திய அரசு நிர்வாகத்தின் கீழ் வந்தது. இந்த தீவு தொடர்பான சட்ட ஆவணங்கள் எங்களது முன்னோர்களிடம் இருந்து வந்தன. கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தபோது எங்களிடமிருந்த ஆவணங்களை வாங்கி அதனையும் இணைந்து வழக்குத் தொடர்ந்தார். நீண்டகாலமாகி விட்டதால் தற்போது எங்களிடம் என்னென்ன ஆவணங்கள் உள்ளன என்பதை பார்த்தால் தான் தெரியும்.
சட்ட நிபுணர்களைக் கொண்டு அந்த ஆவணங்களைத் தொகுந்து சட்ட ரீதியாக உரிமை கோரும் அளவுக்கு தகுதியாக உள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம் சார்பில் தயாராக உள்ளோம்.
இது காலம் கடத்த பிரச்சினையாக உள்ளதாலும், இரு நாட்டு மீனவர்கள், இரு நாட்டில் வசிக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சினையாக உள்ளதாலும் தீர ஆராய்ந்து தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதுள்ள நிலை மேலும் சிக்கலாகி விடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள்