இறுதிக் கட்டத்திற்கு முன்னதாக நாளை நடைபெறும் 6-வது கட்ட வாக்குப்பதிவுக்குத் தயார் நிலை
மக்களவைத் தேர்தலில் நாளை நடைபெறவுள்ள 6-வது கட்டத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அனைத்துப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இடம் பெற்றுள்ள 58 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஹரியானா, தேசியத்தலைநகர் தில்லி ஆகியவற்றில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இவை தவிர பீகார், ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் / யூனியன் பிரதேசத்தில் ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களின் தொடர்ச்சியாக இந்தக் கட்டத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் ஒடிசா சட்டப்பேரவைக்கான 42 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறும்.
நிழலுக்கான பந்தல், குடிநீர், கழிப்பறைகள், சாய்வுதளப் பாதைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் வாக்காளர்களை வரவேற்க வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தலுக்கான இதர பொருட்களுடன் தேர்தல் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர்.
பொறுப்புடனும், பெருமிதத்துடனும், பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்கனவே முதல் 5 கட்டங்களில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 428 மக்களவைத் தொகுதிகளுக்கு சுமூகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024-ல் இறுதி மற்றும் 7-வது கட்டத் தேர்தல் எஞ்சியுள்ள 57 தொகுதிகளில் ஜூன் 1 அன்று நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4 அன்று நடைபெறும்.
கருத்துகள்