புதுக்கோட்டையில் ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ஹால்மார்க் நகைகள் பறிமுதல்
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்), மதுரைக் கிளை 09.05.2024 அன்று புதுக்கோட்டையில் அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு 9.151 கிலோ போலி தங்க நகைகளை பறிமுதல் செய்தது.
தெற்கு பிரதான தெருவில் இயங்கி வரும் லிங்கேஸ்வர் நகை மாளிகையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பிஐஎஸ் சின்னம் பொறிக்கப்பட்டு, ஹால்மார்க் தனித்துவ அடையாள இலக்கம் இல்லாமல், போலியான ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட, சுமார் ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள 9.151 கிலோ தங்க நகைகள் பிஐஎஸ் மதுரைக் குழுவால் கைப்பற்றப்பட்டது.
2023, மார்ச் 3-ம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு ஆணை மற்றும் தங்க நகைகள், தங்கக் கலைப்பொருட்களின் ஹால்மார்க்கிங் (திருத்தம்) 2023 ஆணையின் படி, எந்த ஒரு நகைக்கடைக்காரரும் ஒவ்வொரு தங்க நகைக்கும் தனித்தன்மை வாய்ந்த சரியான எச்யுஐடி குறி இல்லாமல் தங்க நகைகளை விற்கக் கூடாது. லிங்கேஸ்வர் நகை மாளிகை, பிஐஎஸ்-ஆல் பதிவு செய்யப்பட்ட நகைக்கடையாக இருந்த போதிலும், அவர்கள் எச்யுஐடி குறியீடு இல்லாமல் தங்க நகைகளை விற்பது சோதனையின் போது கண்டறியப்பட்டது.
இந்திய தர நிர்ணய சட்டம், 2016-ன் படி, மேற்கூறிய நகைக்கடைக்காரர் மீது குற்றவியல் புகார் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது முதல் மீறலுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும், இரண்டாவது மற்றும் அதைத் தொடர்ந்து மீறினால் ஐந்து லட்ச ரூபாய்க்குக் குறையாமல் அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வழி வகுக்கிறது. மேலும் நீதிமன்ற உத்திரவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது விற்கப்படும் பொருட்கள் அல்லது பொருட்களின் மதிப்பை விட பத்து மடங்கு வரை அபராதமும் விதிக்கப்படும்.
கருத்துகள்